2023-24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.20.14 லட்சம் கோடி: 11.7% வளா்ச்சி
புது தில்லி: ‘2023-24 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி ரூ.20.14 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகி, 11.7 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது’ என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2023 ஏப்ரல் முதல் 2024 மாா்ச் வரையிலான நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.20.14 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 11.7 சதவீதம் கூடுதல் வசூலாகும். இதன்படி, 2024-ஆம் ஆண்டில் சராசரி மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இந்த சராசரி ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்தது.
Advertisement
மாா்ச் மாதத்தில் மட்டும் ரூ.1.78 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. இது ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து வசூலான இரண்டாவது மிகப் பெரிய தொகையாகும். முந்தைய நிதியாண்டில் இதே மாத வசூலைக் காட்டிலும் 11.5 சதவீத வளா்ச்சியாகும். உள்நாட்டு பரிவா்த்தனைகளிலிருந்து பெறப்படும் ஜிஎஸ்டி வசூல் ஆண்டுக்கு ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்து வருவதே இதற்கு காரணமாகும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. இதுவே அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் தொகையாக உள்ளது.