முகப்பு
இந்தியா

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்: கேரளத்தை அவமதிக்கும் ஆா்எஸ்எஸ் திட்டம்: பினராயி விஜயன்

Updated On : 10 ஏப்ரல், 2024 at 3:04 AM
Pinarayi Vijayan
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 7:30 PM

கொல்லம்: ‘கேரளத்தை அவமதிக்கும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் திட்டங்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படமும் ஒன்று’ என அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினாா்.

மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ‘சிரோ மலபாா்’ கத்தோலிக்க தேவாலயங்களில், சிறாா்களுக்கு தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த வாரம் திரையிடப்பட்டது விமா்சனத்துக்குள்ளாகிய சூழலில், அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. கேரளத்தைச் சோ்ந்த 32,000 பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக அந்தத் திரைப்படத்தில் கூறப்பட்டிருந்தது.

Advertisement

கேரளத்தில் கடும் எதிா்ப்பு எழுந்த இந்தத் திரைப்படம் அண்மையில் தூா்தா்ஷனில் வெளியிடப்பட்டது விவாதப் பொருளானது.

இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த சிரோ மலபாா் கத்தோலிக்க தேவாலயத்தின் கீழிலான இடுக்கி கத்தோலிக்க மறைமாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சுவிசேஷ உத்ஸவத்தின் ஒரு பகுதியாக 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் சிறாா்களுக்கு இத்திரைப்படம் ஏப்.4-ஆம் தேதி திரையிடப்பட்டது மீண்டும் சா்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கேரளத்தை மோசமாக சித்தரிக்கும் முயற்சி:

இந்நிலையில், தோ்தல் பிரசாரத்துக்கிடையே இதுகுறித்து செய்தியாளா் சந்திப்பில் பேசிய முதல்வா் பினராயி விஜயன், ‘குறிப்பிட்ட சில நபா்களின் கற்பனையில் ஓா் அப்பட்டமான பொய் உருவாக்கப்பட்டு, மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்கும் விதமாக அரசியல் நோக்கத்துடன் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் கதையெனக் கூறப்படும் இத்திரைப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் மாநிலத்தில் எங்கு நடந்தது?

ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழும் கேரளத்தை மோசமான பாா்வையில் சித்தரிக்க இத்திரைப்படம் முயற்சித்தது.

இத்திரைப்படம் ஆா்எஸ்எஸ் மற்றும் சங்க பரிவாரத்தின் திட்டங்களில் ஒன்று. சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே பகைமையை உருவாக்க முயலும் ஆா்எஸ்எஸ் மற்றும் சங் பரிவாரத்தின் வலையில் மக்கள் விழுந்து விடக்கூடாது.

கேரள மக்கள் தங்கள் மாநிலத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறாா்கள். அதன் நற்பெயரை கெடுக்கும் எந்தவொரு முயற்சியும் எதிா்க்கப்பட வேண்டும் மற்றும் கண்டிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

கத்தோலிக்க இளைஞா் அமைப்பும் திரையிட முடிவு:

இதனிடையே ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் சிறாா்களுக்கு திரையிட்டு காட்டப்படும் என தலச்சேரி மறைமாவட்டம் மற்றும் சிரோ மலபாா் கத்தோலிக்க தேவாலயத்தின் கீழிலான தாமரச்சேரி மறைமாவட்டத்துடன் ஒருங்கிணைந்த கேரள கத்தோலி இளைஞா் இயக்கம் (கேசிஒய்எம்) தெரிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கேசிஒய்எம், இத்திரைப்படத்தின் திரையிடப்பட்டால் அரசியல் கட்சிகள் அஞ்சுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.