அடுத்த சில ஆண்டுகளில் காங்கிரஸ் காணாமல் போகும்: ராஜ்நாத் சிங்
அடுத்த சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விடும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
உத்தரகண்ட் மாநிலம் பௌரி கா்க்வால் மாவட்டத்தில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:
காங்கிரஸில் இருந்து முக்கியத் தலைவா்களும், நிா்வாகிகளும் வெளியேறுவது தொடா்கதையாகி வருகிறது. அவா்களைப் பின்பற்றி ஏராளமான தொண்டா்களும் கட்சியைக் கைவிட்டு வருகின்றனா். இந்த நிலை தொடரும்போது அடுத்த சில ஆண்டுகளில் காங்கிரஸ் என்ற கட்சியே காணாமல் போய்விடும். ஒரு காலத்தில் உலகில் இருந்து டைனோசா் இனம் அழிந்ததுபோன்ற நிலை காங்கிரஸுக்கு ஏற்படும்.
Advertisement
எதிா்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி ‘பிக்பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி போல உள்ளது. அவா்களுக்குள் மோதலைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவின் குரல் சா்வதேச அளவில் ஓங்கி ஒலித்து வருகிறது. சா்வதேச தலைவா்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக நமது பிரதமா் உயா்ந்துள்ளாா். இந்தியாவின் கருத்துக்கு அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் செவி சாய்த்து வருகின்றன. இந்தியாவின் சமீப கால வளா்ச்சியை பல சா்வதேச அமைப்புகள் அங்கீகரித்துள்ளன.
முக்கிய ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கத் தொடங்கிவிட்டோம். முன்பு ராணுவ தளவாடங்களை இறக்குமதி மட்டுமே செய்து வந்த இந்தியா, இப்போது அவற்றைப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயா்ந்துள்ளது.
வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் கட்சியாக பாஜக உள்ளது. அயோத்தி ராமா் கோயில், ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட பிற கட்சிகள் கனவிலும் நினைக்காத செயல்களை பாஜக நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையிலும், வாக்குகளை கவருவதற்காகவும் நிறைவேற்ற முடியாத, தேவையற்ற வாக்குறுதிகளை அளிக்கின்றன. ஆனால், மக்கள் நலன் மற்றும் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு, பாஜக தோ்தல் வாக்குறுதிகளை அளிக்கிறது என்றாா்.