மீனவர் குழுவுக்கு அனுமதி மறுப்பு: வெளியே வந்த ராகுல்!
நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட மீனவப் பிரதிநிதிகள் குழுவுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சந்திப்பு.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட மீனவப் பிரதிநிதிகள் குழுவை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியே வந்து சந்தித்துப் பேசினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இடையே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை சந்திக்க மீனவப் பிரதிநிதிகள் குழு வந்துள்ளது. ஆனால், அவர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைவதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை.
தகவலறிந்த ராகுல் காந்தி தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்து வரவேற்புப் பகுதிக்குச் சென்று அவர்களை சந்தித்துப் பேசினார்.
வெளியே வரும்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'நாங்கள் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். இது எங்கள் உரிமை. ஆனால் மீனவர் குழுவை அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. விவசாயிகள் பற்றி நான் அவையில் பேசியிருந்தேன். மீனவர்களைத் தடுக்கவில்லை என்று அவைத் தலைவர் கூறினார். ஆனால், இப்போது அவர்கள் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் விவசாயிகள் பிரச்னை உள்ளது. குழந்தைகள் நலன் தொடர்பாகவும் வந்துள்ளனர். நான் தொடர்ந்து மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவர்களை சந்திப்பது எளிதாக இருப்பதால் எனது வாழ்க்கை சற்று கடினமாகிறது. இப்போது நான் இங்கே தொடர்ந்து வர வேண்டும். என்னுடைய வேலையைச் செய்ய விடுங்கள். இது எனக்கு நல்ல உடற்பயிற்சியையும் தருகிறது' என்றார்.