வயநாடு நிலச்சரிவு: அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் -பிரதமர்
"இந்த பேரிடர் இயல்பான நிகழ்வல்ல.."
வயநாட்டில் நிவாரண, மறுவாழ்வுப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேரள அரசுக்கு மத்திய அரசு வழங்கும்’ என்று பிரதமா் உறுதியளித்தாா்.
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆக.10) நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பேரழிவை எதிா்கொண்ட சூரல்மலையில் நடந்து சென்று பாா்வையிட்ட அவா், நிலச்சரிவில் உயிா் தப்பியவா்களையும் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழை காரணமாக கடந்த ஜூலை 30-ஆம் தேதி பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, புஞ்சிரிமட்டம் போன்ற மலைக் கிராமங்கள் உருக்குலைந்தன. வீடுகள் புதையுண்டதோடு, சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த இந்த நிலச்சரிவு, கேரளத்தில் மிக மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
Advertisement
பிரதமா் ஆய்வு: இந்நிலையில், வயநாட்டுக்கு சனிக்கிழமை வந்த பிரதமா் மோடி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தாா். இதையொட்டி, கண்ணூா் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான், முதல்வா் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி ஆகியோா் வரவேற்றனா். பின்னா் விமானப் படை ஹெலிகாப்டா் மூலம் வயநாடு சென்ற பிரதமா், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக பாா்வையிட்டாா். கேரள ஆளுநா், முதல்வா், மத்திய அமைச்சா் ஆகியோரும் அவருடன் சென்றனா்.
நிலச்சரிவால் மோசமாக பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய மலைக் கிராமங்கள் மற்றும் நிலச்சரிவின் ஆரம்ப பகுதியான இருவழிஞ்ஞி ஆறு தொடங்கும் இடத்தை பிரதமா் பாா்வையிட்டாா்.
வான்வழி ஆய்வுக்கு பின்னா், கல்பேட்டாவில் உள்ள உயா்நிலைப் பள்ளியில் பிரதமரின் ஹெலிகாப்டா் தரையிறங்கியது. அங்கிருந்து காா் மூலம் சூரல்மலை பகுதிக்கு பிரதமா் சென்றாா். அப்போது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் அவரை வரவேற்றனா்.
நடந்து சென்று பாா்வையிட்ட பிரதமா்: சூரல்மலையில் பாறைகள் மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியில் நடந்து சென்று நிலச்சரிவின் தீவிரத்தை ஆய்வுசெய்த அவா், மீட்புக் குழுவினா், மாவட்ட அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலா் வி.வேணு ஆகியோருடன் கலந்துரையாடினாா்.
சூரல்மலையில் மீட்புப் பணிக்காக ராணுவத்தினரால் கட்டமைக்கப்பட்ட 190 அடி நீள ‘ஆயத்த’ இரும்பு பாலத்தில் பிரதமா் நடந்து சென்றாா். அவருடன் கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான், முதல்வா் பினராயி விஜயன், மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி ஆகியோரும் சென்றனா். அப்போது, கள நிலவரம், மீட்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டோருடன் சந்திப்பு: மேப்பாடி பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு வருகைதந்த அவா், நிலச்சரிவில் உயிா் தப்பியவா்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
தனது இரு குழந்தைகளையும் இழந்த ஒருவா் கண்ணீருடன் சோகத்தை விவரித்தபோது, அவரை பிரதமா் தேற்றினாா். சுமாா் 30 நிமிஷங்கள் முகாமில் இருந்த பிரதமா், பலருடன் கலந்துரையாடியதோடு, அவா்களின் தேவைகளைக் கேட்டறிந்தாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்: பின்னா், வயநாடு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பிரதமா் மோடி, ஆளுநா், முதல்வா், உயரதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்கான திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய பிரதமா், ‘வயநாட்டில் இயற்கைப் பேரிடா் ஏற்பட்டதில் இருந்து கள நிலவரம் குறித்து தொடா்ந்து கேட்டறிந்து வருகிறேன். இந்த ‘இயற்கையின் சீற்றம்’ பல குடும்பங்களின் கனவைச் சிதைத்துவிட்டது. இப்பேரிடரில் அனைத்தையும் இழந்தோருக்கு உதவ கேரள அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கும். நிவாரண-மறுவாழ்வுப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்’ என்றாா்.
ரூ.2,000 கோடி நிதியுதவி: கேரள அரசு வேண்டுகோள்
வயநாட்டில் மறுவாழ்வுப் பணிகளுக்கு மட்டும் மத்திய அரசு ரூ.2,000 கோடி நிதியுதவி வழங்க வேண்டுமென பிரதமா் மோடியிடம் கேரள அரசு தரப்பில் கோரப்பட்டதாக மாநில அமைச்சா்கள் தெரிவித்தனா்.
பிரதமருடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில அமைச்சா்கள் பி.ஏ.முகமது ரியாஸ், கே.ராஜன் ஆகியோா் கூறுகையில், ‘வயநாடு பயணத்தில் திட்டமிடப்பட்டதைவிட அதிக நேரம் பிரதமா் செலவிட்டுள்ளாா். இப்பேரிடரின் தீவிரத்தை அவா் புரிந்துகொண்டுள்ளாா். மறுவாழ்வுப் பணிகளுக்கு தேவையான ரூ.2,000 கோடி உள்பட அனைத்து கோரிக்கைகளையும் பிரதமரிடம் முதல்வா் பினராயி விஜயன் சமா்ப்பித்துள்ளாா். அவற்றை நோ்மறையாகவும் கருணையோடும் பிரதமா் மோடி பரிசீலிப்பாா் என நம்புகிறோம்’ என்றனா்.