முகப்பு
இந்தியா

வயநாடு: முகாம்களில் மக்களைச் சந்தித்த பிரதமர் மோடி!

வயநாட்டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 10:34 AM
வயநாடு முகாம்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்த பிரதமர் மோடி.
பகிர்:

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களை பிரதமர் மோடி இன்று சந்தித்துப் பேசினார்.

கேரள மாநிலம் வயநாட்டில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 29-ம் தேதி ஏற்பட்ட கடும் நிலச்சரிவு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் காணாமல் போன 153 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், கேரளத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஆக. 10) வயநாடு வந்துள்ளார்.

கேரளத்தின் கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் கல்பெட்டா பள்ளி அருகே ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி, ராணுவத்தால் கட்டப்பட்ட பெய்லி பாலம் வழியாக நடந்து சென்று சூரல்மலை பகுதியில் பார்வையிட்டார்.

பின்னர், நிலச்சரிவால் வீடுகளை இழந்து முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசினார்.

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக பிரதமர் மோடி அறிவிப்பார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பார்வையிட்ட பின் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும் என கேரள அரசும் எதிர்பார்ப்பில் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →