கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சிபிஐ முன் காத்திருக்கும் சவால்கள்!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் சிபிஐ முன் காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணையைத் தொடங்கியிருக்கும் சிபிஐ முன் பல்வேறு சவால்கள் மலைபோல் நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலியான பெண் மருத்துவரின் குடும்பத்தினரும், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களும், இந்த குற்றச் செயலில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பொதுவாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலிலிருந்து எடுக்கப்படும் திரவமே, இதனை உறுதிபடுத்தும் என்றநிலையில், கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில், இது சிபிஐக்கு உதவுமா, விசாரணையை குழப்புமா என்பதே கேள்விக்குறியாகியிருக்கிறது.
குற்றம் நடந்த இடம் அதிகமானோர் வந்து சென்றதால் தடயங்கள் அழிந்திருக்கும், காவல்துறையினர் தடயங்களை சேகரித்ததே காலதாமதமாக நடந்திருப்பதால் அவர்கள் அளித்த விவரங்களிலும் தெளிவு குறைவாகவே இருக்கும், சாட்சிகளை மறுவிசாரணை செய்யும்போது அவர்களது தகவல்களில் முரண்பாடு ஏற்படலாம், குற்றம் எப்படி நடந்தது என்பதை காவல்துறை செய்துப்பார்த்தது, மேலும் சிபிஐக்கு விசாரணையை முடிப்பதில் பல முடிச்சுகளை ஏற்படுத்தலாம், மேலும் காவல்துறையினர் சேகரித்த தகவல்கள், சாட்சிகள், ஆதாரங்கள் என அனைத்தையும் சிபிஐ வசம் அப்படியே ஒப்படைத்தாலும் அதில் சிபிஐ அதிகாரிகள் சந்திக்கும் சந்தேகங்களுக்கு உரிய நேரத்தில் பதில் கிடைக்காமல் போகலாம்.
அதற்குக் காரணம், மேற்கு வங்க மாநிலத்தில் முதல் முறையாக இதுபோன்றதொரு வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்க, மாநில முதல்வர் ஒப்புக்கொண்டிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில், நீதிபதி கைப்பட எழுதிய விசாரணை அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது. அதில், 31 வயது பெண் மருத்துவரின் உடலில் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் குறித்து விவரிக்கப்பட்டிருந்தது, உடலில் பல ஆழமான காயங்கள் இருந்தன, கண்கள் மற்றும் பெண்ணுறுப்பிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது, இடுப்பு எலும்பு உடைந்துள்ளது, கழுத்து எலும்பு உடைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நீதிபதியின் விசாரணை அறிக்கையும், உடல் கூறாய்வு அறிக்கையும் ஒரே தகவலை சொல்லியிருக்கிறதா என்பதை ஆய்வு செய்வது மிகவும் முக்கியமாகியிருக்கிறது. அதிலும், நீதிபதியின் விசாரணை அறிக்கை என்பது, வெளிப்புற காயங்கள் பற்றி மட்டுமே விவரிக்கிறது, அது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் எழுதப்பட்ட விவரங்களாக இருக்கலாம், ஆனால், உடல் கூறாய்வு என்பது மேலும் பல காயங்கள் மற்றும் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது போன்ற விரிவான விஷயங்கள் விளக்கப்பட்டிருக்கலாம்.
இப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட சில மருத்துவ நண்பர்கள், பலியான பெண் மருத்துவரின் உடலில் மூன்று ஆண்களின் திரவங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இவை அனைத்துமே அடிப்படை ஆதாரமில்லாத தகவல்கள்தான், உடல்கூறாய்வு மற்றும் பலியான பெண்ணின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட திரவத்தை டிஎன்ஏ பரிசோதனை செய்த பிறகுதான், உண்மை தெரியவரும். இதுதான் சிபிஐ விசாரணையைத் தொடங்கியிருப்பதில் இருக்கும் ஒரே மற்றும் முக்கிய ஆதாரமாக இருக்கும். கொல்கத் காவல்துறையும் ஏற்கனவே டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சம்பவம் நடந்த இடம் உடனடியாக காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு சீல் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்குள் முக்கிய தடயம் ஒன்று அழிக்கப்பட்டிருந்தாலும் அது சிபிஐக்கு பின்னடைவாகவே இருக்கும்.
ஒருவேளை, போராட்டக்காரர்கள் சொல்வது போல, இந்த வழக்கில் அரசியல் அல்லது முக்கிய நபர்களின் அழுத்தம் இருந்தால், நிச்சயம் அதுவும் சிபிஐ விசாரணைக்கு மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கலாம். முக்கிய சாட்சிகள் மீதும் அந்த அழுத்தம் போகலாம். காவல்துறை தன்னார்வலர்களின் கை ஓங்கியிருக்கும் இடம் என்பதால், சாட்சிகள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்லக்கூட தயங்கலாம். இதுவும் சிபிஐக்கு பெரிய சவாலாகவே இருக்கும்.
ஏற்கனவே, இந்த வழக்கு மக்கள் மற்றும் ஊடகத்தின் கவனத்தை ஈர்த்துவிட்டது, ஒருங்கிணைந்த விசாரணையில், சிபிஐக்கு இதுவே ஒரு அழுத்தமாக இருக்கும், முக்கிய நபர்களை ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் கூட அழைத்துவிசாரிப்பதில் சிக்கலை சந்திக்கலாம்.
எனவே, பல சவால்களுடன்தான் இன்று இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.