சென்னையில் பிகாரைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் சடலத்தை போலீஸார் தேடி வந்த நிலையில் அவரது சடலம், பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தரமணி பகுதியில் தங்கியிருந்த பிகாரைச் சேர்ந்த தொழிலாளி கௌரவ்குமாா் (24), அவரது மனைவி முனிதா குமாரி (21), அவர்களது 2 வயது மகன் பிர்மணி குமாா் ஆகியோர் கடந்த 25-ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர்.
பிகாரில் இருந்து வேலை தேடி வந்த கௌரவ்குமார் குடும்பத்துக்கு அடைக்கலம் கொடுத்த அதே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், கெளரவ்குமார் சடலம் இந்திரா நகர் முதலாவது அவென்யுவில் ஒரு சாக்கு மூட்டையிலும், பிர்மணிகுமாா் சடலம் இந்திரா நகா் ரயில் நிலையத்தின் பின்புறம் செல்லும் பக்கிங்ஹாம் கால்வாயில் ஓரத்திலும் மீட்கப்பட்டன. ஆனால் முனிதா குமாரி சடலத்தை குப்பைத் தொட்டியில் வீசியதாக, கைதானவர்கள் விசாரணையின்போது தெரிவித்தனர்.
இதையடுத்து பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த இரு நாள்கள் (புதன், வியாழன்) தேடும் பணி நடைபெற்றது. இருப்பினும் சடலம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் (ஜன.30) இந்தப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்ட நிலையில், முனிதா குமாரியின் சடலம் பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைப்பதற்குரிய நடவடிக்கையில் காவல் துறையினா் ஈடுபட்டனர். இந்த வழக்குத் தொர்பாக போலீஸார், மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.