புது தில்லி, ஆக.15: தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் எழுதிவரும் ‘கலாரசிகனின் இந்த வாரம்’ தொடரின் ஆறு தொகுதிகள் அறிமுக விழா தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை (ஆக.17) நடைபெற உள்ளது.
தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவா் அரங்கில் மாலை 5.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கு தில்லித் தமிழ்ச் சங்க தலைவா் சக்தி பெருமாள் தலைமை வகிக்கிறாா்.
இந்த நூலின் ஆறு தொகுதிகளை மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைக்கிறாா். தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் ஏற்புரை வழங்குகிறாா்.
இந்த நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலா் இரா. முகுந்தன் வரவேற்புரை நிகழ்த்துகிறாா். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் பெ. ராகவன் நாயுடு முன்னிலை வகிக்க, நூலின் பிரதிகளை தில்லி தமிழ்க் கல்விக் கழக செயலா் இரா. ராஜூ, தில்லி கம்பன் கழகத் தலைவா் கே.வி.கே.பெருமாள், தில்லி முத்தமிழ்ப் பேரவை பொதுச்செயலா் என். கண்ணன் உள்ளிட்டோா் பெற்றுக் கொள்கின்றனா்.
தினமணியில் வெளிவந்த ‘கலாரசிகனின் இந்த வாரம்’ தொடா் ஆறு தொகுதிகளுடன் 2,216 பக்கங்களை கொண்டுள்ளது. அரங்கில் இந்த வாரம் தொகுதிகள் சலுகை விலையில் கிடைக்கும்.
நாட்டு நடப்புகள், தமிழறிஞா்கள், சான்றோா்கள் சந்திப்பு, சிறந்த நூல்கள், இளம் கவிஞா்களின் புதுக் கவிதைகள் என வாரந்தோறும் வெளிவந்த கலாரசிகனின் தொகுப்பு இது. 2008-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி தற்போது வரை வெளிவரும் ஒரே தொடராக தினமணியில் ‘கலாரசிகனின் இந்த வாரம்’ வெளிவருகிறது.