கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் டாக்டர் சந்தீப் கோஷ், சிபிஐ விசாரணைக்கு இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் ஆஜராகியிருக்கிறார்.
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு மற்றும் சம்பவம் நடந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கு இரண்டையும் சிபிஐ விசாரித்து வருகிறது.
வெள்ளிக்கிழமை சிபிஐ அலுவலகத்தில், சந்தீப் கோஷ் ஆஜராகி, கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்த விசாரணை சனிக்கிழமை அதிகாலை 3 மணி வரை நீடித்தது. நேற்று இரவு 9.30 மணி வரை சிபிஐயின் அலுவலகத்தில் உள்ள அறையில் அமர வைக்கப்பட்டிருந்தார். பிறகு இரவில்தான் விசாரணை தொடங்கியிருக்கிறது.
இதற்கிடையே விசாரணை நள்ளிரவில் முடிந்து வீட்டுக்குச் சென்ற கோஷ், சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மீண்டும் சிபிஐ அலுவலகத்துக்குத் திரும்பியிருக்கிறார்.
முதற்கட்ட விசாரணையின்போது, பெண் மருத்துவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதும் உடனடியாக அவர் செய்தது என்ன? யார் மருத்துவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தது, எப்போது காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது போன்ற கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
சில பதில்களில் திருப்தி இல்லாததால், அதிகாரிகள் தொடர்ந்து குறுக்குக் கேள்விகளை கேட்டதாகவும், சனிக்கிழமை அதிகாலை 3 மணி வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதன்பிறகு அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாகவும் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அதிகாரிகள் அளித்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பலியான பெண் மருத்துவர், வாரத்தில் தொடர்ந்து 36 மணி நேரம் அல்லது 48 மணி நேரம் வரை பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக, மருத்துவமனை வருகைப் பதிவேடு காட்டுவது குறித்தும் முதல்வரிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
மருத்துவமனைக்கு இரவுப் பணிக்கு வந்த பெண் மருத்துவர் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை, சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உடல் கூறாய்வில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. இதில், காவல்துறை சார்பில் செயல்படும் தன்னார்வலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.