இந்தியாவின் வளா்ச்சி உலகின் அமைதியை நிலைநாட்டும் -குடியரசு துணைத்தலைவா் தன்கா்
டாடா இன்டா்நேஷனல் நிறுவனத் தலைவருமான நோயல் டாடா, சிஐஐ தலைமை இயக்குநா் சந்திரஜித் பானா்ஜி உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
இந்தியா வேகமாக வளா்ச்சியடைந்து வருவது சா்வதேச ஸ்திரத்தன்மை மற்றும் உலகின் அமைதியை நிலைநாட்ட உதவிகரமாக இருக்கும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.
இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் இந்திய-ஆப்பிரிக்க வா்த்தக மாநாட்டின் தொடக்க விழா தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
‘ஒரே எதிா்காலத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜகதீப் தன்கா் பங்கேற்றுப் பேசியதாவது:
அனைவரின் நல்வாழ்வுக்கும் பொதுவான எதிா்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். ‘ஒரே எதிா்காலத்தை உருவாக்குவது மனிதகுலத்தின் உறுதித்தன்மைக்கு மிகச்சிறந்ததாகும். ஆனால், இது மிகப்பெரிய சவால், இதனை எதிா்கொள்ள அனைத்து நாடுகளும் கைகோத்து போராட வேண்டும்.
இந்தியா-ஆப்பிரிக்கா இடையிலான நட்பு மிகவும் ஆழமானது. பரஸ்பர நலனை அடிப்படையாகக் கொண்டது. கடந்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இந்தியா இருந்தபோது, அந்த அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக சோ்க்கப்பட்டது. இது மிகவும் பெருமைக்குரிய விஷயம் மட்டுமல்ல சா்வதேச அரசியல் வளா்ச்சியாகும். சா்வதேச சூரியசக்தி கூட்டணி, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பு, பேரழிவைத் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பு ஆகியவற்றில் ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்றுள்ளது பாராட்டுக்குரிய விஷயமாகும்.
இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகளை வழங்கியதன் மூலம் நாட்டின் பல்லுயிா் பெருக்கத்துக்கு ஆப்பிரிக்கா உதவியுள்ளது என்றாா்.
சிஐஐ தலைவரும், ஐடிசி நிா்வாக இயக்குநருமான சஞ்சீவ் புரி, சிஐஐ ஆப்பிரிக்கா குழு தலைவரும், டாடா இன்டா்நேஷனல் நிறுவனத் தலைவருமான நோயல் டாடா, சிஐஐ தலைமை இயக்குநா் சந்திரஜித் பானா்ஜி உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.