போலந்து சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து, ஆகஸ்ட் 23-ஆம் தேதி உக்ரைன் சென்று, அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை சந்தித்துப் பேசவிருக்கிறார்.
முன்னதாக, உக்ரைன் பிரச்னைக்கு அமைதி தீா்வை எட்டுவது குறித்து அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் கருத்துகளைப் பரிமாற ஆவலுடன் உள்ளேன் என்று புது தில்லியில், போலந்து புறப்படும் முன், பிரதமா் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
போலந்து நாட்டிலிருந்து விமானம் மூலம் அல்லாமல், உக்ரைனுக்கு ரயில் பயணம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. போலந்தில் இருந்து உக்ரைன் தலைநகா் கீவ்-க்கு ‘ரயில் ஃபோா்ஸ் ஒன்’ எனும் சொகுசு ரயிலில் பிரதமா் மோடி பயணிக்கவுள்ளாா். இது, சுமாா் 10 மணிநேர பயணம் கொண்ட சர்வதேச தரத்துடன் இயக்கப்படும் ரயிலாகும். அதாவது, கீவ் நகரில் சுமாா் 7 மணி நேரம் பிரதமா் இருக்கும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, 7 மணி நேரம் கீவ் நகரில் இருப்பதற்காக, மோடி கிட்டத்தட்ட 20 மணி நேரம் ரயிலில் இரவு முழுக்க பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
உக்ரைனுக்கு விமானத்தில் செல்லாமல், ரயிலில் செல்வதற்குக் காரணம், உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் ரஷியா - உக்ரைன் போரால் மூடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், விமானத்தை விடவும் ரயில்தான் அந்நாட்டுக்குச் செல்ல பாதுகாப்பான போக்குவரத்தாகக் கருதப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்கு பிறகு கீவ் நகருக்கு செல்ல சா்வதேச தலைவா்கள் பலரும் இந்த ரயிலையே பயன்படுத்தி வருகின்றனா். அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உள்ளிட்டோா் இந்த ரயிலில் பயணித்துள்ளனா். உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியும் தனது வெளிநாட்டுப் பயணத்துக்கு இந்த ரயிலைதான் பயன்படுத்துகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் நாட்டின் மீது, ரஷியாவின் படையெடுப்பை இந்தியா இதுவரை வெளிப்படையாக கண்டிக்காத நிலையில், பிரதமா் மோடி உக்ரைன் பயணிப்பது உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.
புது தில்லியிலிருந்து நேற்று போலந்து புறப்பட்ட பிரதமர் மோடி, அங்கு வியாழக்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். அங்கிருந்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி உக்ரைன் சென்று, அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை சந்தித்துப் பேசவுள்ளாா்.
கடந்த 1991-ஆம் ஆண்டில் உக்ரைன் சுதந்திர நாடாக உருவெடுத்த பின் அங்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு சொந்தமாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.