மோடியும் அதானியும் ஒன்றுதான் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மோடியும் அதானியும் ஒன்றுதான், இருவரும் வேறு வேறு அல்ல. அதானி மீதான லஞ்சப் புகார் விவகாரத்தில் விசாரணை நடத்த பிரதமர் மோடி ஒத்துக்கொள்ளமாட்டார்.
ஏனெனில், அதானி மீது விசாரணையைத் தொடங்கினால் பிரதமர் மோடியும் விசாரணைக்கு ஆளாவார்' என்று கூறியுள்ளார்.
அதானி விவகாரம்
நாட்டில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிா்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலா் (சுமாா் ரூ. 2,239 கோடி) லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அதானியை கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
நாடாளுமன்றத்தில் போராட்டம்
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? என பதாகைகளுடன் முழக்கமிட்டு வருகின்றனர்.
மேலும், 'மோடியும் அதானியும் ஒன்றுதான்' என்று எழுதப்பட்ட கருப்பு கோட் ஜாக்கெட்டுகள் அணிந்து எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.