புஷ்பா 2 - நெரிசலில் பெண் பலியான வழக்கு: திரையரங்க உரிமையாளர் உள்பட 3 பேர் கைது!
தெலங்கானாவில் திரையரங்க உரிமையாளர் உள்பட 3 பேர் கைது...
தெலங்கானாவில் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் காட்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியானதைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தெலங்கானா சிக்கடப்பள்ளி பகுதியில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த வாரம் (டிச. 5) புஷ்பா 2 திரைப்படம் திரையிடப்பட்டது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி டிச. 4 இரவு வெளியானது. இந்தக் காட்சியைக் காண முன்னறிவிப்பு எதுவுமின்றி நடிகர் அல்லு அர்ஜூன் அந்தத் திரையரங்கிற்கு வந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை ஒழுங்குப்படுத்த திரையரங்க நிர்வாகம் எந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. மேலும், முன்னணி நடிகர்களின் வருகை குறித்தும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
பெரிய அளவிலான ரசிகர்கள் கூட்டம் இரவு 9.30 மணியளவில் திரையரங்கத்தில் கூடியது.
இதையும் படிக்க | ‘வளா்ந்த பாரதம்’ கனவல்ல இலக்கு: ஜகதீப் தன்கா்
திரையரங்கின் பால்கனி பகுதியில் அவரைக் காண வந்த கூட்டத்தை அவரது பாதுகாப்புக் குழுவினர் அருகில் நெருங்கவிடாமல் தடுத்தனர். இதில் அங்கு படம் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி (35) என்ற பெண்ணும் அவரது மகன் ஸ்ரீதேஜ் ஆகியோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.
மருத்துவமனையில் ரேவதி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மகனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, திரையரங்க நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜூன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அல்லு அர்ஜூன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர் சந்தீப், மேலாளர் நாகராஜு , பால்கனி பொறுப்பாளர் ஸ்ரீகந்தகம் விஜய்சந்தர் ஆகியோரைக் காவல்துறையினர் நேற்று (டிச. 8) கைது செய்தனர்.