முகப்பு
இந்தியா

காங்கிரஸுக்கு ஒளியாய் இருந்து வழிகாட்டியவர் மன்மோகன் சிங்: சோனியா காந்தி

நேர்மை, பணிவு என இரண்டையும் ஒருசேரக் கொண்டிருந்த நபரை கட்சி இழந்துவிட்டது என சோனியா காந்தி வருத்தம்.

Updated On : 27 டிசம்பர், 2024 at 2:46 PM
மன்மோகன் சிங் உடன் சோனியா காந்தி
பகிர்:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறந்த நண்பர், வழிகாட்டி, தத்துவவாதி என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். அவரின் மறைவு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நேர்மை, பணிவு என இரண்டையும் ஒருசேரக் கொண்டிருந்த நபரை கட்சி இழந்துவிட்டது எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிச. 26) இரவு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு நாளை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளன.

இதனிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. தில்லியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மன்மோகன் சிங் மறைவு குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், மன்மோகன் சிங் மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள சோனியா காந்தி,

''தேசிய அளவில் நிரப்ப முடியாத வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் அளவிட முடியாத பங்களிப்பைக் கொடுத்தவர் மன்மோகன் சிங். அவரைப் போன்ற தலைவரைப் பெற்றதற்கு கட்சியில் நாங்களும், மக்களும் பெருமை அடைகிறோம்.

நேர்மை, இரக்கம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டு, நம் நாட்டிற்கு முழு மனதுடன் சேவையாற்றிய தலைவரை நாம் இழந்துள்ளோம்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒளியாய் இருந்து வழிகாட்டியவர். அவரின் இரக்கம் மற்றும் நோக்கத்தால் நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை முன்னேற்றமடைந்துள்ளது.

தூய்மையான இதயம் மற்றும் நல்ல மனதிற்காக நாட்டு மக்களால் விரும்பப்பட்டவர். உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் மற்றும் அறிஞர்களால் மதிக்கப்பட்டு போற்றப்பட்ட மன்மோகன் சிங், தான் வகித்த ஒவ்வொரு பதவிக்கும் தனித்துவத்தைச் சேர்த்தவர். அதன்மூலம் நாட்டிற்கு பெருமையைத் தேடித்தந்தவர்'' என சோனியா காந்தி குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | கார்கே தலைமையில் காங்., செயற்குழு கூட்டம்!

முழு கட்டுரையைப் படிக்க →