முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானார்.
தில்லி இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், மன்மோகன் சிங் இல்லத்துக்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மன்மோகன் சிங் மறைவையொட்டி, நாடு முழுவதும் 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.
மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி
‘இந்தியா மிகுந்த மதிப்புக்குரிய தலைவர்களுள் ஒருவரை இழந்துள்ளது. எளிமையான பின்புலத்திலிருந்து வந்த டாக்டர் மன்மோகன் சிங், போற்றுதற்குரிய பொருளாதார நிபுணராக விளங்கியவர்.
நிதியமைச்சர் உள்பட அரசின் பல்வேறு பதவிகளில் பொறுப்பு வகித்தவர். பொருளாதாரக் கொள்கையில் ஆழமான தடத்தை விட்டுச் சென்றுள்ளார். மக்களின் வாழ்க்கை மேம்பட அவர் பரந்தளவிலான முயற்சிகளை எடுத்தவர்’ எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.