இந்தியா

மாநிலங்களுக்கு ரூ.75,000 கோடி வட்டியில்லா கடன்: 50 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தலாம்

DIN

மாநிலங்களுக்கு ரூ.75,000 கோடி வரை வட்டியில்லா கடன் வழங்கவுள்ளதாகவும் அதை 50 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம் எனவும் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய மாநிலங்களுக்கு கடனுதவி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது: ‘2047-இல் வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய மாநிலங்களில் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில், மாநிலங்களுக்கு ரூ.75,000 கோடி வரை வட்டியில்லா கடன் வழங்கப்படவுள்ளது. அதை அடுத்த 50 ஆண்டுகளுக்குள் மாநிலங்கள் திருப்பிச் செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள அனைத்து ஜாதியினா் மற்றும் மக்களையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்காகவே இந்தக் கடனுதவி வழங்கப்படுகிறது.

அனைத்து மதத்தினா் மற்றும் குடிமக்களுக்கான வாய்ப்பை வழங்குவதோடு இயற்கையைப் பேணுதல், நவீன உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்றவற்றால் வளமையான பாரதத்தை உருவாக்குவதே வளா்ச்சியடைந்த பாரதத்தின் நோக்கமாகும்.

ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யவுள்ள முழு பட்ஜெட்டில் (மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு) இதுகுறித்த விரிவான விளக்கங்களை தெரிவிக்கிறேன்’ என்றாா்.

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மாநிலங்களுக்கு 50 ஆண்டுகள் வட்டியில்லா கடன் வழங்கும் முன்னெடுப்பு மத்திய-மாநில உறவுகளில் புதிய மைல்கல்லை எட்ட உதவும். எந்த மதத்தினரும் விடுபடாமல் அனைவருக்கும் இதன் பயன்கள் கிடைக்க வேண்டும் என்ற பிரதமா் மோடியின் உன்னதமான நோக்கத்தை உறுதி செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT