ஜவுளித் துறையின் மதிப்பு அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி
கடந்த 10 ஆண்டுகளில் நூல், துணி மற்றும் ஆடை உற்பத்தியில் 25 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஜவுளித் துறையின் மதிப்பு சந்தையில் ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய ஜவுளி வர்த்தக அமைச்சகம் சார்பில் தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பாரத் 2024 கண்காட்சியை பிரதமர் மோடி திறந்வைத்தார்.
இந்த கண்காட்சியில் நாடு முழுவதும் உள்ள ஜவுளி துறையினர் தங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களைக் காட்சிப்படுத்தினர். 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 3000 கண்காட்சியாளர்கள் 40 ஆயிரம் பார்வையாளர்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டனர்.
அப்போது பிரதமர் மோடி பேசியது,
2014-ல் இந்திய ஜவுளி துறையின் மதிப்பு ரூ.7 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் தற்போது ரூ.12 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் நூல், துணி மற்றும் ஆடை உற்பத்தியில் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜவுளித் துறையில் தரக் கட்டுப்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. உங்கள் அனைத்து முயற்சிகளிலும் எங்கள் அரசாங்கம் முழுமையாக ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.
பருத்தி, சணல் மற்றும் பட்டு உற்பத்தியில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.