புது தில்லியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக, சனிக்கிழமை இரவு, தில்லி விமான நிலையத்தின் முதல் முனைய மேற்கூரை விழுந்த விபத்தில் பலியான ஓட்டுநரின் குடும்பப் பின்னணி அதிர்ச்சி தருவதாக உள்ளது.
தில்லி விமான நிலைய மேற்கூரையின் இரும்புத் தூண் ஒன்று கார் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில், கார் ஓட்டுநர் ரமேஷ் குமார், அதிலிருந்து மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
45 வயது கார் ஓட்டுநரின் இறப்பு, அவரது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியிலும் சொல்லொணாத் துயரத்திலும் தள்ளியிருக்கிறது. ரமேஷ், தில்லியின், ரோஹினிப் பகுதியைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருந்தார். அவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். தங்களது தந்தை இல்லாமல், நாங்கள் எப்படி குடும்பத்தை நடத்தப்போகிறோம் என்றே தெரியவில்லை என்கிறார்கள்.
எங்களுக்கு காலை 8.30 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. விமான நிலையத்தில் எங்கள் தந்தை மயங்கி விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும்தான் கூறினார். இதுபோன்ற விபத்து என்று யாரும் கூறவில்லை. நாங்கள் விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்த காவலர்களிடம் கேட்டபோது, அவர்கள் எங்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று அங்கேயே எங்களை மாலை 4 மணி வரை வைத்திருந்தார்கள். பிறகுதான் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்குச் சென்ற பிறகும் அவருக்கு என்ன ஆனது என்று யாரும் சொல்லவில்லை. பல மணி நேரம் காத்திருந்தோம், அப்போதுதான், அங்கிருந்த ஒருவர், நாளை காலை வந்து உடல்கூறாய்வுக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொள்ளும்படி கூறினார் என்கிறார்கள்.
ரமேஷ் குமாரின் மகளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்தை எப்படி செய்யப்போகிறோம் என்று குடும்பமே கலங்கி நிற்கிறது. இந்த சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.