முகப்பு
இந்தியா

கைதிகளின் பட்டியலை பரிமாற்றம் செய்த இந்தியா-பாக்.!

இரு நாடுகளும் கைது செய்த அண்டை நாட்டு மீனவர்கள் மற்றும் குடிமக்களின் விவரங்கள் இந்தப் பட்டியலில் பரிமாறப்படும்.

Updated On : 1 ஜூலை, 2024 at 11:01 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் தூதரகங்களின் மூலம் தில்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் இன்று சிறைக்கைதிகளின் பட்டியல் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இந்தப் பட்டியலில் இரு நாடுகளும் கைது செய்த அண்டை நாட்டு மீனவர்கள் மற்றும் குடிமக்களின் விவரங்கள் பரிமாறப்படும்.

இதன் மூலம், இந்தியா 452 பாகிஸ்தானியர்களைக் (366 பொதுமக்கள் மற்றும் 86 மீனவர்கள்) கைது செய்துள்ளதாகவும், பாகிஸ்தான் 254 இந்தியர்களைக் (43 பொதுமக்கள் மற்றும் 211 மீனவர்கள்) கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூதரக அணுகுமுறைப்படி இரு நாடுகளும் கடந்த 2008-ம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்த விதிகளின் கீழ் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 என ஆண்டுக்கு இருமுறை கைதிகளின் பட்டியலை பரிமாறிக்கொள்ளவேண்டும்.

”பாகிஸ்தான் காவலில் உள்ள 186 மீனவர்கள் மற்றும் பொதுமக்களை விடுவிக்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தியர்கள் என்று நம்பப்படும் 47 கைதிகளுக்கு தூதரக அனுகல் அனுமதி வழங்குமாறும் பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது”

”இரு நாட்டுக் கைதிகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணும் விஷயத்தில் இந்தியா உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் நாட்டுக் கைதிகள் என்று நம்பப்படும் 75 கைதிகளின் குடியுரிமை உறுதி செய்யப்படாததால், அவற்றை சரிபார்க்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்” என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014 முதல் 2639 இந்திய மீனவர்களும், 71 பொதுமக்களும் பாகிஸ்தானில் இருந்து இந்தியவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கடந்தாண்டு மட்டும் 478 மீனவர்களும், 13 பொதுமக்களும் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →