கொல்லப்பட்ட இஸ்லாமியர் மௌலானா சஹாபுதீன் 
இந்தியா

விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி இஸ்லாமியர் அடித்துக் கொலை: ஜார்க்கண்டில் அதிர்ச்சி!

ஜார்க்கண்டில் விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி இஸ்லாமியர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ஜார்க்கண்ட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண் மீது இரு சக்கர வாகனத்தில் மோதியதாகக் கூறி இஸ்லாமிய இமாம் ஒருவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கொடேர்மா மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியரான மௌலானா சஹாபுதீன் என்பவர் பர்கடா மாவட்டத்தில் இமாமாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஜூன் 30 அன்று காலை 8 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் சென்று கொண்டிருந்தார். அப்போது குத்தாரி காரியா என்னும் பகுதியில் சென்று கொண்டிருக்கையில் சஹாபுதீனின் வாகனம் மீது ஒரு ஆட்டோ மோதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்த அனிதா தேவி என்ற பெண் மீது அவரது வாகனம் மோதியதால் அந்தப் பெண்ணின் கை மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் கணவர் மகேந்திர யாதவ், மைத்துனர் ராம்தேவ் யாதவ், உள்ளூர்வாசிகள் மற்றும் அருகே கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் விபத்து நடந்த இடத்தில் கூடியுள்ளனர். அனைவரும் சஹாபுதீனை பேட் மற்றும் கட்டைகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

“அவருடைய மூக்கில் தொடர்ந்து ரத்தக்கசிவு இருந்தது. வெளிப்புறத்தை விட உள் காயங்கள் அதிகமாக இருந்துள்ளது. அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தகுந்த முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சஹாபுதீனின் மகன் முகமது பர்வேஷ் ஆலம் தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியிலுள்ள இஸ்லாமிய அமைப்பின் தலைவர் சூரஜ் தாஸ் கூறுகையில், “வாகனம் மோதி விபத்துக்குள்ளான பெண்மணி அந்தக் கும்பலிடம் அடிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதையும் மீறி அவர்கள் சஹாபுதீனைத் தாக்கியுள்ளனர். அந்தப் பெண்ணுக்குப் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், அவர் இஸ்லாமியர் என்பதாலும், அவரின் தொப்பி மற்றும் தாடியைப் பார்த்து அவரைத் தாக்கியுள்ளனர்.

அவர் விபத்து நடந்ததால் இறக்கவில்லை. அப்படியென்றால் அவர் காப்பாற்றப்பட்டிருப்பார். அந்த கும்பல் அவரின் தலையில் தாக்கிக் கொலை செய்துள்ளனர்” என்று கூறினார்.

இது தொடர்பாக காவல்துறை தெரிவித்தத் தகவலில் அவர் கும்பலால் தாக்கப்படவில்லை என்றும், விபத்து நடந்த இடத்தில் காயங்களுடன் கிடந்த சஹாபுதீனை காவல்துறையினர் தங்களின் வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் இறந்ததாகவும், அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாதகாலத்தில் இந்தியா முழுவதும் பல இடங்களில் இஸ்லாமியர்கள் மீது கும்பல் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பற்றி எரியும் இந்தோனேசியா... நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

உ.பி.: மது அருந்திய 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!

அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையில் போலீஸாரின் விடுமுறைகள் ரத்து

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ரச்சிதா ராம்?

SCROLL FOR NEXT