ஜார்க்கண்ட் முதல்வராக இன்று மாலை 5.00 மணிக்கு ஹேமந்த் சோரன் பதவியேற்கிறார்.
முன்னதாக ஜூலை 7ல் ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பார் என்று முக்தி மோர்ச்சா கட்சி அறிவித்த நிலையில், தற்போது இன்று(ஜூலை 4) மாலை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹேமந்த் சோரனுக்கு ஜார்ககண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமானம் செய்து வைக்கிறார்.
நில மோசடியுடன் தொடர்புள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜன.31-ஆம் தேதி கைது செய்தது. அதற்கு முன்பு அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடா்ந்து, பின்னர், ஜேஎம்எம் கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவர் சம்பயி சோரன் மாநில முதல்வரானார்.
இதையடுத்த ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் 28-ஆம் தேதி ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதைத் தொடா்ந்து, மாநிலத் தலைநகா் ராஞ்சியில் உள்ள மத்திய சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள சம்பயி சோரன் இல்லத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள், தலைவா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஜேஎம்எம் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஹேமந்த் சோரன் ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார். ஜாா்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரனே மீண்டும் பதவியேற்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த சம்பயி சோரன் புதன்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்த நிலையில் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக ஆட்சி அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஜார்க்கண்டின் முதல்வராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.