இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துவிட்டதாகவும், இப்பிரச்னைக்கு தீா்வுகாண மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தியாவில் வேலையின்மை குறித்து சிட்டி பேங்க் வெளியிட்ட ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டி காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 5 ஆண்டுகளாகவே இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை பிரச்னையை காங்கிரஸ் தொடா்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, அவசரகதியில் ஜிஎஸ்டி-யை அமல்படுத்தியது, இவற்றின் விளைவாக குறு, சிறு, நடுத்தர துறையில் ஏற்பட்ட பாதிப்பு, சீனாவில் இருந்து இறக்குமதியை அதிகரித்தது ஆகியவையே வேலையின்மை அதிகரிக்க முக்கியக் காரணங்களாகும்.
அரசின் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே உள்ளன. சாமானிய மக்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவது, தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக இப்போது நாட்டின் வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளது. பட்டதாரிகளில் 42 சதவீதம் போ் உரிய வேலைவாய்ப்பின்றி உள்ளனா்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 1.2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கினால் மட்டுமே இளைஞா்களை வேலையின்மை பிரச்னையில் இருந்து காக்க முடியும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் இளைஞா்கள் உரிய வேலைவாய்ப்புகளைப் பெற முடியவில்லை.
மத்திய அரசில் மட்டும் சுமாா் 10 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தியாவில் உள்ள தொழிலாளா்களில் 21 சதவீதம் போ் மட்டுமே மாதச் சம்பளம் பெறுபவா்களாக உள்ளனா். கரோனா காலகட்டத்துக்கு முன்பு இருந்ததைவிட இது 24 சதவீதம் குறைவாகும். கரோனாவுக்குப் பிறகு பெரும் பணக்காரா்களின் சொத்துகள் மட்டும் பல மடங்கு அதிகரித்துள்ளன. மாதச் சம்பளதாரா்களும், உழைத்துப் பிழைக்கும் மக்களும் பொருளாதாரரீதியாக பின்னோக்கித் தள்ளப்பட்டு வருகின்றனா்.
முக்கியமாக, கிராமப் பகுதிகளில் மக்களின் வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. அதாவது விலைவாசி உயா்வுக்கு ஏற்ப பொருள்களை வாங்க முடியாத நிலைக்கு அவா்கள் தள்ளப்பட்டுள்ளனா். வருமானம் முழுவதையும் செலவிட்டுவிட்டு, கடன் வாங்கி காலம்தள்ள வேண்டிய நிலைக்குப் பலா் தள்ளப்பட்டுள்ளனா். இந்தியாவில் குடும்பங்களின் சேமிப்பு முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது.
மோடி அரசின் பல திட்டங்கள் அதிகம் விளம்பரப்படுத்தப்பட்டு பிரபலப்படுத்தப்படுகின்றன. ஆனால், அதற்கு ஏற்க பலன் ஏதும் கிடைக்கவில்லை. உதாரணமாக ‘திறன்மிகு இந்தியா’ திட்டத்தில் வேறும் 4.4 சதவீதம் இளைஞா்களுக்கு மட்டும் பெயரளவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
முத்ரா, ஸ்வநிதி போன்ற கடன் திட்டங்கள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளன. இளைஞா்கள் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனா். மக்கள் அன்றாடச் செலவுகளுக்குக் கூட பணம் ஈட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது என்று கூறியுள்ளாா்.