30 பேருடன் சென்ற மாநகரப் பேருந்து தீப்பிடித்தது! உயிர்ச்சேதம் தவிர்ப்பு
பெங்களூரில் 30 பேருடன் சென்ற அரசுப் பேருந்து தீப்பிடித்தது..
பெங்களூரு மாநகரில் அரசுப்பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மெட்ரோ போக்குவரத்துக் கழகத்தால் 144ஈ வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து இன்று(ஜூலை 9) காலை 9 மணியளவில் மாநகரின் எம்.ஜி. சாலையில் அனில் கும்ப்ளே வளைவுப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பேருந்தின் இன்ஜினில் இருந்து பற்றத் தொடங்கிய தீ, வேகமாக வாகனம் முழுவதும் பரவியது. பேருந்தின் முன்பக்கத்திலிருந்து புகை வருவதைக் கண்ட பயணிகள் உடனடியாக வாகனத்தை விட்டுக் கீழே இறங்கியதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணித்த நிலையில் அவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.