கதுவா தாக்குதல்: ராணுவ வீரர்களின் துரித நடவடிக்கையால் தப்பியோடிய பயங்கரவாதிகள்!
கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது ராணுவ வீரர்கள் உடனடியாக பதிலடி கொடுத்ததால் பயங்கரவாதிகள் தப்பியோடியுள்ளனர்.
புது தில்லி: ஜம்மு-காஷ்மீரின் கதுவா நகரில், ராணுவ வாகனத்தை ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்தியபோத, உடனடியாக ராணுவ வீரர்கள் சூழ்ந்துகொண்டு அவர்கள் மீது நடத்திய பதில் தாக்குதலால், பயங்கரவாதிகள் தப்பியோடியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திடீரென, வாகனத்தின் மீது ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டபோது, சில ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். ஆனால், உடனடியாக சுதாரித்துக்கொண்ட ராணுவ வீரர்கள், தங்களது துப்பாக்கிகளால், 5,100 சுற்றுகள் பயங்கரவாதிகளை நோக்கி சுட்டுள்ளனர். இதனால், காயமடைந்த தங்களது சக வீரர்களைக் காப்பாற்றுவும், தாக்குதலை நிறுத்திவிட்டு பயங்கரவாதிகள் தப்பியோடவும் காரணமாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் கதுவா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, மேலும் பல தகவல்களை திரட்டியுள்ளனர்.
அப்போது, சம்பவத்தின்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் தொடங்கியதையடுத்து, ராணுவ வீரர்கள் தங்களது பதிலடியைக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ராணுவ வீரர்கள் கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதனால்தான் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்கள் தங்களது ராணுவ துப்பாக்கியால், பயங்கரவாதிகளை நோக்கி இடைநிற்காமல் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதால்தான், பயங்கரவாதிகள் தங்களது ஆயுதங்களைப் போட்டுவிட்டு தாக்குதலை நிறுத்திவிட்டு தப்பியோடியிருக்கிறார்கள்.
முதலில், மூன்று பயங்கரவாதிகள் இருவேறு இடங்களில் பதுங்கியிருந்து, ராணுவ வாகனம் வந்தபோது தாக்கியிருக்கிறார்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட ஐந்தாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.
கதுவாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கதுவா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை மச்சேடி, பத்னோட்டா, கிண்ட்லி, லோஹை மல்ஹார் பகுதிகளில் ராணுவம், போலீஸார், சிஆர்பிஎஃப் படையினர் ஆகியோர் கூட்டாக தேடி வருகிறார்கள்.
தரைவழி தேடுதல் படைகளுக்கு உதவியாக ஹெலிகாப்டர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அடர்ந்த வனப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.