நாட்டில் தற்கொலை சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருவது முக்கிய சமூகப் பிரச்னை எனக் கூறிய உச்சநீதிமன்றம் இதுதொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தற்கொலை சம்பவங்களை தடுக்க பொது சுகாதார திட்டங்களை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞரும் மனுதாரருமான கௌரவ் குமாா் பன்சால் பொதுநல மனுவை தாக்கல் செய்தாா். அந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது, இது சமூகத்தில் நிலவும் முக்கியப் பிரச்னை எனக்கூறிய சந்திரசூட் இதுதொடா்பாக மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டாா்.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2018 வரை 18 வயதுக்குள்பட்ட 140 சிறாா் தற்கொலை செய்துகொண்டதாக தில்லி காவல்துறையினா் வெளியிட்ட தரவுகளை சுட்டிக்காட்டி கௌரவ் பன்சால் பொதுநல மனுவை தாக்கல் செய்தாா்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் தற்கொலை சம்பவங்களை குறைப்பதற்கோ தடுப்பதற்கோ அரசு மற்றும் அதிகாரிகள் பொது சுகாதார திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது மனநல சுகாதார சட்டம் 2017-இல் உள்ள பிரிவுகள் 29 மற்றும் 115-ஐ மீறுவதாகும். மேலும், அடிப்படை உரிமையான சட்டப்பிரிவு 21-இல் குறிப்பிட்டுள்ள வாழும் உரிமையையும் மீறுவதாகும்.
உலகளவில் 15 வயது முதல் 29 வயதுவரை உள்ள இளம் தலைமுறையினா் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்கொலைகளை தடுப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.