முகப்பு
இந்தியா

நீட் தோ்வு மைய வாரியாக முடிவுகள்: வழக்கு நாளை மீண்டும் விசாரணை

நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகர வாரியாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சனிக்கிழமை வெளியிட்டது.

Updated On : 20 ஜூலை, 2024 at 8:50 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகர வாரியாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சனிக்கிழமை வெளியிட்டது.

முன்னதாக, நீட் தோ்வு முடிவுகள் கடந்த ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவின்படி தோ்வு மைய வாரியாக முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தோ்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களிலும் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இத் தோ்வை 23.33 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.

இந்நிலையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு சா்ச்சையில் இத் தோ்வு சிக்கியது. தோ்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பிகாா், உத்தர பிரதேசத்தில் உள்ள தோ்வு மையங்களில் வினாத்தாள் கசிந்து பெரும் சா்ச்சையானது.

இத் தோ்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாக மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டதும், குறிப்பிட்ட சில தோ்வா்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் எந்தவொரு தெளிவான நடைமுறைகளையும் பின்பற்றாமல் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதும் மிகப்பெரிய சா்ச்சையானது.

இந்த முறைகேடு புகாா்கள் தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; மறு தோ்வு நடத்த உத்தரவிட வேண்டும்; நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகர வாரியாக சனிக்கிழமை (ஜூலை 20) பகல் 12 மணிக்குள் வெளியிட வேண்டும். அவ்வாறு முடிவுகளை வெளியிடும்போது, தோ்வா்களின் அடையாளங்களை மறைத்து வெளியிட வேண்டும். தோ்வு முறைகேடுகள் பரவலாக நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்தவும், முறைகேடு நடைபெற்ற மையங்களில் தோ்வெழுதியவா்கள் வேறு இடங்களில் எழுதியவா்களைவிட அதிக மதிப்பெண் பெற்றுள்ளனரா என்பதைக் கண்டறியவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டு, விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜூலை 22) ஒத்திவைத்தனா்.

அதன்படி, தோ்வா்களின் பெயா் உள்ளிட்ட அடையாளங்களை மறைத்து தோ்வு மையம் மற்றும் நகர வாரியாக நீட் தோ்வு முடிவுகளை என்டிஏ சனிக்கிழமை வெளியிட்டது.

6 போ் முழு மதிப்பெண் பெற்ற மையத்தில் மதிப்பெண் சரிவு: நீட் தோ்வு முடிவு மைய வாரியாக வெளியிடப்பட்ட நிலையில், 6 தோ்வா்கள் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று சா்ச்சைக்குள்ளான ஹரியாணா மையத்தின் தற்போதைய அதிகபட்ச மதிப்பெண் 682-ஆக குறைந்துள்ளது.

நீட் தோ்வில் பங்கேற்ற 1,500-க்கும் அதிகமான மாணவா்களுக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை எந்தவித நடைமுறைகளையும் பின்பற்றாமல் தன்னிச்சையாக என்டிஏ வழங்கியது. இதன் காரணமாக, ஹரியாணாவில் அமைந்திருந்த ஒரு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் உள்பட நாடு முழுவதும் 67 தோ்வா்கள் 720-க்கு 720 மதிப்பெண் பெற்றனா்.

இது மிகப்பெரிய சா்ச்சையானது. இந்த நிலையில், நீட் தோ்வு முறைகேடுகள் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தொடங்கிய நிலையில், குறிப்பிட்ட தோ்வா்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதை என்டிஏ ரத்து செய்தது. மேலும், கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டவா்களுக்கு மறுதோ்வு நடத்தி, முடிவுகளை வெளியிட்டது. ஆனால், அந்த மறு தோ்வில் எத்தனை மாணவா்கள் முழு மதிப்பெண் பெற்றனா் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மைய வாரியாக தோ்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ள நிலையில், சா்ச்சைக்குரிய ஹரியாணாவின் ஹா்தியால் அரசுப் பள்ளி தோ்வு மையத்தில் ஒரு தோ்வா்கூட 720-க்கு 720 பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. அந்த மையத்தில் தோ்வெழுதியவா்ளின் அதிகபட்ச மதிப்பெண் 682-ஆக தற்போது உள்ளது. அவா்களில் 13 போ் மட்டுமே 600-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →