புது தில்லி: தேசிய தேர்வு முகமையில் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் வெளி நிறுவனத்திலிருந்து பணியமர்த்தப்பட்டவர்கள் என சுமார் 170 ஊழியர்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.
தேர்வுக்கான வினாத்தாள்களை தயாரிப்பது உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் அனைத்தையும் தேசிய தேர்வு முகமையே மேற்கொள்ளும், வெளிநிறுவனங்களிடம் விடாது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுப்பிய எழுத்துப்பூர்வமான கேள்விக்கு மத்திய கல்வி இணையமைச்சர் சுகந்த மஜும்தார் பதில் அளித்திருந்தார்.
திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்வியில், தேசிய தேர்வு முகமையில் எத்தனை நிரந்தர ஊழியர்கள், எத்தனை ஒப்பந்த ஊழியர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டிருந்தார்.
மத்திய ஊழியர்கள் திட்டத்தின் மூலம், தேசிய தேர்வு முகமையின் மேலாண் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக, 22 பேர் ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை 39 ஆக உள்ளது, வெளி நிறுவனங்களின் ஊழியர்கள் எண்ணிக்கை 132. ஒரே ஒரு ஊழியர் மட்டும், அதன் முதன்மைத் துறையிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
தேர்வுகளை நடத்துவது, பல்வேறு செயல்பாடுகள், பாதுகாப்பு அளவீடுகள் போன்றவற்றை தேசிய தேர்வு முகமை எடுக்கும். மேலும், பயோ மெட்ரிக் வருகைப் பதிவு, சிசிடிவி கண்காணிப்பு, செயற்கை நுண்ணறிவு ஆய்வு, தேர்வு வினாத்தாள் விநியோகம் போன்றவற்றை மிகவும் அனுபவம் வாய்ந்த சேவை அமைப்புகளிடம் வழங்கும்.
ஆனால், வினாத்தாள் தயாரிப்பது உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களை வெளி நிறுவனங்களுக்கு வழங்குவதில்லை என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் எழுந்தபடி இருப்பது, முகமையின் மீதான பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய உயர்நிலைக் குழுவை மத்திய அரசு நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.