காதி கிராமோத் யோக்கின் வர்த்தகம் முதல்முறையாக ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாகவும், அதிகரித்து வரும் காதி மற்றும் கைத்தறி விற்பனைகளால் புதிய வேலைவாய்ப்புகள் பெருகி வருவதாகவும் பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.
’மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று பேசிய பிரதமர் மோடி காதி பொருள்களை முன்னர் பயன்படுத்தாத பலரும் இப்போது பெருமையுடன் பயன்படுத்துவதாகக் கூறினார்.
”காதி கிராமோத் யோக்கின் வர்த்தகம் முதல்முறையாக ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. காதி வர்த்தகம் 400% உயர்ந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிகரித்து வரும் காதி மற்றும் கைத்தறி விற்பனைகளால் புதிய வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.
இந்தத் துறையில் தொடர்புடைய பெண்கள் இதனால் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர்.
உங்களிடம் நிறைய வகைகளில் துணிகள் இருக்கலாம். ஆனால், காதி துணிகள் இப்போது வரை இல்லையென்றால், இனி அதனை வாங்குங்கள்” என்று அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ள நமது வீரர்கள் சர்வதேச அளவில் நம் தேசியக் கொடியை ஏற்ற மீண்டும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும், அனைவரும் அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும் என்றும் பிரதமர் பேசினார்.
சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளில் சிறப்பாக பங்குபெற்று 4 தங்கப் பதக்கங்கள் மற்றும் 1 வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மாணவர்களுடன் மனதின் குரல் ஒலிபரப்பின்போது உரையாடிய பிரதமர் அவர்களைப் பாராட்டினார்.
மேலும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் பெற்ற அஸ்ஸாம் மாநிலத்தின் ’மொய்டாம்ஸ்’ குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.