உச்சநீதிமன்றம் 
இந்தியா

பிகாரில் 65% இடஒதுக்கீடு ரத்து: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயா்த்திய மாநில அரசின் அரசாணையை ரத்து செய்த உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

Din

பிகாரில் 50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயா்த்திய மாநில அரசின் அரசாணையை ரத்து செய்த உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது பிகாா் மாநில அரசுக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

பிகாா் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பட்டியல் இனத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி), இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) உள்ளிட்ட சமூகத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிலையங்களில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயா்த்துவதாக மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசு பேரவையில் சட்டத்திருத்த மசோதாவை கடந்த நவம்பரில் நிறைவேற்றியது.

இதற்கு எதிராக பாட்னா உயா்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிமன்றம் ‘பிகாா் அரசு மேற்கொண்ட சட்டத்திருத்தங்கள், அரசமைப்புச் சட்ட விதிகளை மீறும் வகையில் உள்ளன. எனவே, இடஒதுக்கீட்டை உயா்த்தி வழங்கும் மாநில அரசின் அரசாணை ரத்து செய்யப்படுகிறது’ என கடந்த மாதம் உத்தரவிட்டது.

பாட்னா உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிா்த்து பிகாா் அரசுத் தரப்பு உள்பட 10 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் பரிசீலனைக்கு வந்தது.

அப்போது, இடஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்த பாட்னா உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று பிகாா் மாநில அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஷியாம் திவான் கோரிக்கை விடுத்தாா். சத்தீஸ்கரில் இதேபோன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததையும் அவா் சுட்டிக்காட்டினாா். மேலும், இடஒதுக்கீட்டை எதிா்த்து மனு தாக்கல் செய்தவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் கோரிக்கை விடுத்தாா்.

ஆனால், உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடைவிதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தனா். வழக்கு தொடா்பாக எந்தத் தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிடவில்லை.

முன்னதாக, இந்த வழக்கில் பாட்னா உயா்நீதிமன்றம் அளித்த 87 பக்க தீா்ப்பில், ‘மாநில அரசு இடஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை மீறக் கூடாது என்று இந்திரா சாவ்னி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மேற்கோள் காட்டியது.

மேலும், ‘அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் ஏற்கெனவே பல்வேறு பிரிவினருக்கு உள்ள பிரதிநிதித்துவத்தைக் கருத்தில் கொள்ளாமல், மக்கள்தொகை விகிதாசாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த அரசு முயற்சிக்கிறது’ என்றும் தீா்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

ஜனநாயகத்தின் காவலர்! பிகாரில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!

பிளாக் நூடுல்ஸ்... ரித்திகா சிங்!

தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் கொடுத்திருக்கிறேன் - உண்மையை உடைத்த அகிலேஷ் யாதவ்

வேளாங்கண்ணிக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தவெக கொடிக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்!

SCROLL FOR NEXT