புது தில்லி: புது தில்லியில், தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ளம் புகுந்ததால் மூன்று மாணவர்கள் பலியான சம்பவத்தில், அடித்தளத்தில் பயோ மெட்ரிக் சிஸ்டம் வைக்கப்படவில்லை என மாணவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
புது தில்லியின் பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் இருந்த ஐஏஎஸ் தனியார் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் இயங்கி வந்த நூலகத்தில் இருந்த பயோ மெட்ரிக், வெள்ளம் பாதித்ததால் சரியாக இயங்காமல் போனதால்தான் மாணவர்கள் சிக்கிக்கொண்டதாக சில தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, சம்பவம் நடந்த தனியார் பயிற்சி மையத்தில், படித்து வரும் 22 வயது மாணவர் ஒருவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், அடித்தளத்தில் பயோ மெட்ரிக் முறை எதுவும் நிறுவப்படவில்லை. இந்த அடித்தளம் பெரும்பாலும் தேர்வுகள் நடத்தவும், படிக்கும் புத்தகங்களை வைத்திருக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இங்கு வழக்கமாக இரண்டு வாயிற்கதவுகள் இருக்கும், ஒன்று எப்போதுமே மாலை 6 மணிக்கு பூட்டப்பட்டுவிடும், எனவே, பூட்டப்பட்ட கதவு அருகே, பலியான மாணவர்கள் சிக்கியிருக்கக் கூடும் அதனால்தான் அவர்கள் வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்டனர் என்று நான் கருதுகிறேன் என அடையாளம் வெளியிட விரும்பாத மாணவர் கூறினார்.
வழக்கமாக மழை பெய்தாலே, அடித்தளத்தை பூட்டிவிடுவார்கள். ஆனால் சம்பவம் நடந்த அன்று ஏன் அவ்வாறு செய்யவில்லை என்றே தெரியவில்லை என்கிறார்கள் மாணவர்கள்.
பெரும்பாலான தனியார் நிறுவனங்களில், நூலகங்களில் பயோ மெட்ரிக் முறை இருக்கிறது, ஆனாலும் இந்த பயிற்சி மையத்தில் அந்த அமைப்பு இல்லை என்று மாணவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும்போதும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. பயிற்சி மைய நிர்வாகம் மற்றும் மாணவர்கள் தரப்பில் அதிக முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.