மக்களவைத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. இதன் மூலம், இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தியா கூட்டணி அமைந்தபோது, மிகப்பெரிய கட்சித் தலைவர்களான மம்தா பானர்ஜி உள்ளிட்டோருக்கு, இந்தக் கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை தாங்குமோ என்ற சந்தேகம் எழுந்திருக்கலாம். இவர்களுடன் மிகப்பெரிய கட்சித் தலைவர்கள் ஷரத் பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், மு.க. ஸ்டாலின் ஆகியோரும் கைகோர்த்தனர். ஆனால் இந்தக் கூட்டணிக்கு தலைமையாக காங்கிரஸ் கட்சியை மற்ற கட்சிகள் கருதவில்லை. கூட்டணியை ஒருங்கிணைத்த கட்சியாகவே காங்கிரஸ் இருந்து வந்தது.
அதற்குக் காரணம், கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெற்ற படுதோல்விதான். ஆனால், நிலைமை அப்படியே இருக்கவில்லை.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களிலும், 2014 மக்களவைத் தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 99 இடங்களில் அதன் வெற்றி உறுதியானது. ஒருபக்கம் ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்ற நிலையில், காங்கிரஸ் அபார வெற்றியை பெற்றிருக்கிறது.
மேலும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஹிந்தி பேசும் மாநிலங்களில் இந்தியா கூட்டணி கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. குறிப்பாக உத்தரப் பிரேசத்தில் இந்தியா கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.
எனவே, மிகப் பழம்பெரும் முக்கிய கட்சியாக இருந்த காங்கிரஸ், இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக மாறியிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் ஆற்றிய பணியும், அதன் தலைவராக ராகுல் காந்தி ஆற்றிய பிரசாரமும் கூட்டணிக்கு வலு சேர்த்தன என்றால் அது மிகையில்லை.
ராகுல் காந்தி மேற்கொண்ட நடைப்பயணம், பல்வேறு தரப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது பிரச்னைகளை கேட்டறிந்தது போன்றவை இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உதவியது. அது மட்டுமல்ல, உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி போட்டியிடும் இடங்களையெல்லாம் அறிவித்துவிட்ட பின்னரும், பெரிய கட்சி என்ற அந்தஸ்து பாராமல், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்க முன்முயற்சி மேற்கொண்டு, கூட்டணியை உறுதி செய்த போது, அக்கட்சியின் தேர்தல் வியூகம் பலராலும் பாராட்டுதலுக்கு வழிஏற்படுத்தியது.
இந்தியா கூட்டணியின் இந்த அபார வெற்றிக்கு காங்கிரஸ் மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. உத்தரப்பிரதேசத்திலும் மகாராஷ்டிரத்திலும் இந்தியா கூட்டணி மிகச் சிறப்பான வெற்றியை பெற்று, கூட்டணியின் வெற்றிக்கு வலுசேர்த்திருக்கிறது.
எனவே, இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கப்போவது எந்தக் கட்சி என்பதில் எந்த சந்தேகமும் ஏற்படப்போவதில்லை என்றே கருத்துகள் வருகின்றன. தேசிய அளவிலான கூட்டணிக்கு தலைமை தாங்க, மிகப்பழம்பெரும் கட்சிக்கே தகுதி உள்ளது என்பதை, நிச்சயம் மாநிலக் கட்சித் தலைமைகளும் புரிந்துகொள்ளும், ஏற்றுக்கொள்ளும் என்று தெரிகிறது.
பாஜகவை நாடாளுமன்றத்திலும், அடுத்தடுத்த மாநில தேர்தல்களிலும் சந்திக்க இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை நிச்சயம் பொருத்தமாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.