போபால்: மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், நாட்டிலேயே மிகக் குறைந்த மற்றும் மிக அதிகபட்ச வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகளைப் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை வட மேற்கு தொகுதியில் போட்டியிட்ட சிவசேனையின் இரு பிரிவு வேட்பாளர்களில் ஷிண்டே அணியைச் சேர்ந்த ரவீந்திர வாய்கர் முதலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிறகு தபால் வாக்குகளை மீண்டும் ஒரு முறை எண்ணி, அவர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுது. தபால் வாக்குகளை எண்ணும் வரை, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் 1 வாக்கு வித்தியாசம் என்றே இருந்துள்ளது. இரவு 9 மணிக்கு 48 வாக்குகள் என மாற்றப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் இவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து மிக அதிகபட்ச வாக்கு வித்தியாசம். ஏற்கனவே நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கொடுத்த இந்தூர்தான் அதிகபட்ச வாக்கு வித்தியாசம் என்ற பெருமையையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் இந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் சங்கா் லால்வானி, இந்திய தோ்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். இவ்விரு பெருமைக்கும் காரணம் காங்கிரஸ் வேட்பாளர்.
தேர்தலுக்கு முந்தைய கடைசி நாளில் காங்கிரஸ் வேட்பாளா் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றதால், அக்கட்சிக்கு சேர வேண்டிய வாக்குகள் நோட்டாவுக்கு மாறின. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு 2.18 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்குக் கிடைத்தன.
காங்கிரஸுக்கு அதிா்ச்சியூட்டும் வகையில் கடைசி நாளில் தனது வேட்புமனுவை அக்சய் காந்தி பாம் திரும்பப் பெற்று, பாஜகவில் ஐக்கியமானாா். கடைசி நேரத்தில் என்ன செய்வது என தெரியாமல், நோட்டாவுக்கு (இவா்களில் யாருமில்லை) வாக்களிக்குமாறு காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. அதற்கும் கைமேல் பலன் கிடைத்தது.
25.27 லட்சம் வாக்காளா்கள் கொண்ட இந்தூா் மக்களவைத் தொகுதியில் 4-ஆம் கட்டமாக கடந்த மே 13-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. தோ்தலில் 61.75 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பாஜக வேட்பாளா் சங்கா் லால்வானி 12.26 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக நோட்டாவுக்கு 2.18 லட்சம் வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் சஞ்சய்-க்கு 51 ஆயிரம் வாக்குகளும் கிடைத்தன.
எனவே, இவர் நோட்டாவை விட 10 லட்சம் வாக்குகளும், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட மற்ற வேட்பாளா்களைவிட 11.75 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று, சங்கா் லால் வானி இமாலய சாதனையைப் படைத்துள்ளாா். நாட்டின் தோ்தல் வரலாற்றிலேயே அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளா் என்ற சாதனைக்கும் அவா் சொந்தக்காரா் ஆனார். ஆனால் என்ன அவர் இந்த சாதனையை முறைப்படி பெறவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் விலகியதாலேயே இந்த சாதனை படைக்கப்பட்டது.
2024 மக்களவைத் தேர்தலில் குறைந்த வாக்குவித்தியாசம் 48 ஆகவும் அதிகபட்ச வாக்கு வித்தியாசம் 11 லட்சமாகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.