கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டினால், பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 7ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஒரு வழக்கறிஞர் இறந்ததால், ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 2019 முதல் 2023 வரை பாஜக ஆட்சி நடந்தது. கடந்தாண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, தற்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தனர். பாஜக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக முதல்வர் பதவிக்கு ரூ.2,500 கோடி, அமைச்சர் பதவிக்கு ரூ.500 கோடி நிர்ணயம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கரோனாவைத் தடுக்கும் உபகரணங்களுக்கான டெண்டர் விவகாரத்தில் 75 சதவிகிதம் கமிஷன், பொதுப்பணித்துறை டெண்டரில் 40 சதவிகித கமிஷன், மதம்சார்ந்த அமைப்புகளுக்கு 30 சதவிகித மானியம் வழங்கியது என குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
இதுதொடர்பாக பத்திரிகைகளிலும் காங்கிரஸ் சார்பில் விளம்பரமும் கொடுக்கப்பட்டது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவினை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கேசவ பிரசாத் 2023 மே மாதம் 8ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
தற்போதைய முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட இன்னும் சிலர் மீது வழக்கு தொடரப்பட்டது.
பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி பாஜகவின் பெயருக்கு அவப்பெயர் விளைவிப்பதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் ஆஜராகி ஜாமீன் பெற்றனர். இவர்களுக்கு கடந்த 1 ஆம் தேதி ஜாமீன் கிடைத்தது. ஆனால் ராகுல் காந்திக்கு இன்னும் இந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை. ஜுன் 1 ஆம் தேதி ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு, நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
ஆனால் அவர் மக்களவைத் தேர்தலின் காரணத்தினால் ஆஜராகவில்லை. ராகுல் காந்தி மேலும் காலஅவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஜுன் 7-இல் ஆஜராக உத்தரவிட்டது.
ஆனால், வழக்குரைஞர் ஒருவர் இறந்ததால், நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 7) இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதனால் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணை ஜூன் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.