ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல்: 6 வீரர்கள் காயம்
ஜம்மு - காஷ்மீரில் ஒரே வாரத்தில் மூன்றாவது தாக்குதல்.
ஜம்மு - காஷ்மீரில் மூன்றாவது முறையாக புதன்கிழமை அதிகாலை பயங்கரவாதிகள் தாக்கியதில் 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
தோடாவின் சத்திரகல்லா பகுதியில் அமைந்துள்ள ராணுவ சோதனைச் சாவடியின் மீது புதன்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், 5 ராணுவ வீரர்கள், ஒரு சிறப்புக் காவலர் காயமடைந்ததாகவும், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, தோடா பகுதி முழுவதும் ராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக நேற்று இரவு கதுவா பகுதியில் குடியிருப்புகளின் மீது இரு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்களின் பதில் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவரை ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.
அதேபோல், ரெய்சி பகுதியில் பக்தர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 33 பேர் படுயாகமடைந்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஜம்மு - காஷ்மீர் பகுதியில் 3 முறை பயங்கராவதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் ராணுவ வீரர்களின் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.