குவைத் தீ விபத்து: பிரதமர் மோடி இரங்கல்!
குவைத் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டின் மேங்காஃப் மாவட்டத்தில் அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானவர்களில் 10 பேர் இந்தியர்கள் எனவும் கூறப்படுகிறது.
புதன்கிழமை அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு ஆறு மாடிக் கட்டடத்தில் 195-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாடு, கேரளத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில்,“குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது எண்ணங்கள் அனைத்தும் உயிரிழந்தவர்களுக்கு நெருக்கமானவர்களை பற்றி தான் உள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.