கோட்டாவில் போட்டித் தேர்வாளர் தற்கொலை!
2024-ல் 11 போட்டித் தேர்வாளர்கள் தற்கொலை
ராஜஸ்தானில் போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் மோதிஹாரியைச் சேர்ந்த 17 வயதான ஆயுஷ் ஜெய்ஸ்வால் என்பவர், ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள ஒரு கட்டண விடுதியில் இரண்டு ஆண்டுகளாகத் தங்கி, ஐஐடி - ஜேஇஇ தேர்வுக்காக படித்து வந்தார். இந்நிலையில், ஜெய்ஸ்வால் சனிக்கிழமை (ஜூன் 15) இரவு வரையில் அறையை விட்டு, வெளியே வரவில்லை என அவரது நண்பர்கள் விடுதி உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர், விடுதிக்கு வந்த காவல்துறையினர் ஜெய்ஸ்வால் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, ஜெய்ஸ்வால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ஜெய்ஸ்வாலின் உடலை மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் முன்னரே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அவரது குடும்பத்தினர் வந்த பிறகே பிரேத பரிசோதனை நடத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், ஜெய்ஸ்வாலின் அறையில் தற்கொலைக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, 2024ஆம் ஆண்டில் ஜெய்ஸ்வால் உள்பட 11 போட்டித் தேர்வாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].