அவசரநிலை தீர்மானத்துக்கு எதிர்ப்பு, அமளி! நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைப்பு!
நாளை (ஜூன் 27) இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார்.
மக்களவையில் அவசரநிலைக்கு எதிரான தீர்மானம் வாசிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் அவை இன்று (ஜூன் 26) ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை நாளை காலை கூடும் நிலையில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றவுள்ளார்.
18-வது மக்களவையின் தலைவர் பதவிக்கு இன்று காலை தேர்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தரப்பில் பாஜகவின் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி தரப்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிட்டனர்.
பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அவரை அழைத்துச் சென்று தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மக்களவைத் தலைவருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்து கூறி உரையாற்றிய பிறகு, 1975-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசரநிலைக்கு எதிராக தீர்மானத்தை ஓம் பிர்லா வாசித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில், தீர்மானம் வாசிக்கப்பட்டவுடன் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுவரை மக்களவைத் தலைவரை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக தேர்ந்தெடுத்து வந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் மக்களவை துணைத் தலைவர் பதவி கோரிக்கையை ஆளுங்கட்சி நிராகரித்ததால் முதல்முறையாக தேர்தல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.