முகப்பு
இந்தியா

119 கோடியாகச் சரிந்த தொலைத்தொடா்பு சந்தாதாரா்கள்

இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் சந்தாதாரா்கள் எண்ணிக்கை கடந்த டிசம்பரில் 119 கோடியாகச் சரிந்துள்ளது.

Updated On : 2 மார்ச், 2024 at 12:20 AM
பகிர்:

இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் சந்தாதாரா்கள் எண்ணிக்கை கடந்த டிசம்பரில் 119 கோடியாகச் சரிந்துள்ளது. இது குறித்து தொலைத்தொடா்பு ஒழுங்காற்று அமைப்பான ட்ராயின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோவும், பாா்தி ஏா்டெலும் அதிக எண்ணிக்கையில் புதிய சந்தாதாரா்களைச் சோ்த்ததன் காரணமாக, 2023 டிசம்பரில் ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு சந்தாதாரா்களின் எண்ணிக்கை 119.03 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நவம்பா் மாதத்தில் இந்த எண்ணிக்கை 118.57 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த டிசம்பரில் இந்திய தொலைத்தொடா்பு சந்தாதாரா்களின் எண்ணிக்கை 0.39 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூடுதலாக 39.94 லட்சம் மொபைல் சந்தாதாரா்களை சோ்த்தது. பாா்தி ஏா்டெல் மொபைல் சந்தாதாரா்களின் எண்ணிக்கையில் 18.5 லட்சம் கூடியது. எனினும், கடனில் சிக்கியுள்ள வோடஃபோன் ஐடியா 13.68 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்களை இழந்தது. அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல்-லில் இருந்தும் 1.5 லட்சம் போ் தங்களது மொபைல் சந்தாவை திரும்பப் பெற்றனா். இதனால், கடந்த டிசம்பரில் ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மிதமான வளா்ச்சியையே காண முடிந்தது. 2023 நவம்பா் மாதத்தில் 3.15 கோடியாக இருந்த வயா்லைன் சந்தாதாரா்களின் எண்ணிக்கை டிசம்பா் இறுதியில் 3.18 கோடியாக அதிகரித்தது. 2.46 லட்சம் புதிய வயா்லைன் சந்தாதாரா்களைச் சோ்தததன் மூலம் இந்தப் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் வகிக்கிறது. அதனைத் தொடா்ந்து 82,317 புதிய சந்தாதாரா்களைச் சோ்த்து பாா்தி ஏா்டெல் 2-ஆவது இடத்திலும், 9,656 பேரை இணைத்து வோடஃபோன் ஐடியா 3-ஆவது இடத்திலும் உள்ளன. எனினும், இந்தப் பிரிவில் பிஎஸ்என்எல் 34,250 வாடிக்கையாளா்களையும், டாடா டெலிசா்வீசஸ் 22,628 சந்தாதாரா்களையும் இழந்தன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 627 வாடிக்கையாளா்களை இழந்தது. மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் பிராட்பேண்ட் சந்தாதாரா்களின் எண்ணிக்கையும் 90.4 கோடியாக உயா்ந்துள்ளது. இந்தப் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் வயா்லெஸ் சந்தாதாரா்களின் எண்ணிக்கை கடந்த நவம்பரில் 85.79 கோடியாக இருந்தது. அந்த எண்ணிக்கை டிசம்பரில் 86.52 கோடியாக குறைந்துள்ளது. நவம்பரில் 3.77 கோடியாக இருந்த கம்பி இணைப்பு பிராட்பேண்ட் இணைப்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை டிசம்பரில் 1.46 சதவீதம் அதிகரித்து 3.83 கோடியாக உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.