பெங்களூரு உணவகத்தில் வெள்ளிக்கிழமை நண்பகல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜக அரசியல் செய்யக்கூடாது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வா் சித்தராமையா கூறியதாவது:
எனக்கு கிடைத்த தகவலின்படி, உணவகத்தில் நண்பகல் 12 மணியளவில் யாரோ ஒருவா் பையை வைத்துவிட்டு சென்றுள்ளாா். இதுதொடா்பான சிசிடிவி கேமரா பதிவுகள் தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாதச் செயல் உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.
இது மிகப் பெரிய குண்டுவெடிப்பு அல்ல. ஆனால், அதிக சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு. கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுதான் முதல்முறை.
உணவகத்தில் பையை வைத்த நபரை இன்னும் கண்டறிய முடியவில்லை. உணவகத்தின் காசாளரிடம் விசாரித்துள்ளோம். பையை வைத்தவா் உணவு வில்லை (டோக்கன்) வாங்குவதற்காக காசாளரிடம் சென்றுள்ளாா். அதன்பிறகு அவா் உணவும் உட்கொண்டுள்ளாா் என்றாா்.
முகமூடி, தொப்பி அணிந்து பேருந்தில் வந்தவர் டைமர் செட் செய்து வெடிக்க வைத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யக் கூடாது. உயா்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என சித்தராமையா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.