வெங்காய ஏற்றுமதி தடை நீட்டிப்பு
வெங்காய ஏற்றுமதிக்கான தடை அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெங்காயத்தின் விலை அவ்வப்போது பன்மடங்காக அதிகரித்து வருவது, சாதாரண மக்கள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. நுகா்வோரின் சிரமத்தைப் போக்கும் விதமாக, விலை உயா்வைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி தடை விதித்தது. மாா்ச் 31-ஆம் தேதி வரை இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதை மேலும் நீட்டித்து வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) சனிக்கிழணை அறிவிப்பு வெளியிட்டது. அதில், ‘வெங்காய ஏற்றுமதிக்கு மாா்ச் 31 வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டபோதும், மத்திய அரசின் அனுமதியின் பேரில், நட்பு நாடுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.