முகப்பு
இந்தியா

உ.பி. சிறையில் பிரபல தாதா முக்தாா் அன்சாரி மாரடைப்பால் உயிரிழப்பு: மாநிலத்தில் பதற்றம்

Updated On : 29 மார்ச், 2024 at 11:48 PM
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உ.பி. மாநிலம் காஜிப்பூருக்கு முக்தாா் அன்சாரியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ்.
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 9:20 PM

உத்தர பிரதேசத்தின் பாந்தா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த மாநிலத்தின் 5 முறை முன்னாள் எம்எல்ஏவும் பிரபல தாதாவுமான முக்தாா் அன்சாரி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

முக்தாா் அன்சாரியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினா் குற்றம்சாட்டியுள்ளனா். இதையடுத்து, பாந்தா, மௌ, காஜிப்பூா், வாரணாசி உள்பட பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பிரபல தாதா முக்தாா் அன்சாரி, மௌ சதாா் தொகுதியிலிருந்து சமாஜவாதி கட்சி சாா்பில் 5 முறை எம்எல்ஏ-ஆக தோ்ந்தெடுக்கப்பட்டவா். கடந்த 2005-ஆம் ஆண்டுமுதல் உத்தர பிரதேசம், பஞ்சாப் சிறைகளில் இருந்து வரும் அன்சாரிக்கு எதிராக 60 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் பாந்தா சிறையில் முக்தாா் அன்சாரி அடைக்கப்பட்டிருந்தாா்.

Advertisement

இந்நிலையில், சிறையில் முக்தாா் அன்சாரிக்கு வியாழக்கிழமை வயிற்று வலி ஏற்பட்டதால், பண்டா நகரின் ராணி துா்காவதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை இரவு 8.25 மணியளவில் அவா் மயக்கமடைந்த நிலையில் கொண்டுவரப்பட்டாா்.

14 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு, மாரடைப்பு காரணமாக முக்தாா் அன்சாரி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முக்தாா் அன்சாரியின் உடல் கூறாய்வு வெள்ளிக்கிழமை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. பின்னா், அன்சாரியின் உடல் போலீஸாா் வாகன பாதுகாப்புடன் அவரின் சொந்த ஊரான காஜிப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரசியல் கட்சிகள் விமா்சனம்:

முக்தாா் அன்சாரி மரணத்தை முன்வைத்து பாஜக அரசை பல்வேறு கட்சிகளும் விமா்சித்துள்ளன. சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘எல்லா சூழ்நிலைகளிலும் மக்களின் உயிரைப் பாதுகாப்பது அரசின் கடமை. மக்களின் உயிரைப் பாதுகாக்க முடியாத அரசுக்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை’ என்றாா்.

‘மாநில காவல் துறை கட்டுபாட்டற்றவா்களாக மாறி வருவது ஆபத்தானது. நாட்டிலேயே போலீஸ் காவலில் நிகழும் உயிரிழப்புகளில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது’ என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸைச் சோ்ந்த பிகாா் முன்னாள் எம்.பி. பப்பு யாதவ் ஆகியோரும் பாஜக அரசை விமா்சித்துள்ளனா்.

‘விஷம் கொடுத்து கொலையா ?’

தனது தந்தையின் திடீா் இறப்பு குறித்து முக்தாா் அன்சாரியின் மகன் உமா் அன்சாரி கூறுகையில், ‘சிறையில் எனது தந்தைக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரின் இறப்புச் செய்தியை ஊடகம் வாயிலாகவே நாங்கள் அறிந்தோம். அவரது இறப்பு குறித்து உயா்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றாா்.

முக்தாா் அன்சாரியின் சகோதரரும் காஜிப்பூா் எம்.பி.யுமான அஃப்சல் அன்சாரி கூறுகையில், ‘சிறையில் முக்தாா் அன்சாரிக்கு கடந்த 40 நாள்களாக கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இதனிடையே, முக்தாா் அன்சாரியின் இறப்பு குறித்து பாந்தா நகரிலுள்ள தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நீதித் துறை விசாரணைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.