தேர்தல் பரப்புரைகளில் மத வெறுப்புப் பேச்சுக்களைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டாலும் சமூக வலைதளங்களிலும், நேரடி பரப்புரைகளிலும் பல அரசியல் தலைவர்கள் மத வெறுப்புப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், ‘இந்த நேரத்தில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பிரதமர் மோடிக்கு ஆதரவு தர வேண்டும். ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்லாதோரின் சொத்துகளை அபகரித்து, அவர்களுக்கு பிடித்த இனமான இஸ்லாமியர்களிடம் கொடுத்துவிடுவார்கள். நமது வளங்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் உரிமை உள்ளது என்று மன்மோகன் சிங்கும் ஒருமுறை கூறியுள்ளார். இதுவே வரலாறு நெடுக நடந்துள்ளது.
பழங்கால இந்தியா மிக அழகாகவும், வளமாகவும் இருந்துள்ளது. ஒவ்வொரு இந்தியரும் நிறைய தங்கங்கள் வைத்திருந்து மிகவும் வளமானவர்களாக வாழ்ந்துள்ளனர். படையெடுப்பாளர்கள், திருடர்கள், தீவிரவாதிகள் தொடர்ந்து நமது வளங்களைத் திருடி அவர்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். அனைத்திற்கும் மேலாக நமது கோவில்களை சேதப்படுத்தினர். இந்தக் கொடுமைகளை செய்த சமூகத்தை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி நினைக்கிறது.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை என்பது முஸ்லிம் லீக் சித்தாந்தத்தின் வெளிப்பாடே. காங்கிரஸ் உங்களின் வளங்களை முஸ்லிம்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிடும்.
இந்த கொடூரத் திட்டம் நரேந்திர மோடிக்குத் தெரியும். இதனை தடுத்து நிறுத்த அவரால் மட்டுமே முடியும். நமது பாரத பண்பாட்டின் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் மோடிக்கு வாக்களியுங்கள்’ என்று வருகிறது.
நேற்று(ஏப்.30) வெளியிடப்பட்ட அந்தக் காணொளியை தற்போது நீக்கியுள்ளனர்.
குறிப்பிட்ட மதத்தின் மீது பரப்பப்படும் இதுபோன்ற வெறுப்புப் பிரச்சாரங்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சியினரும், சமூக வலைதளப் பயனாளர்களும் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதிக குழந்தைகள் பெறுபவர்களான இஸ்லாமியர்களுக்கு நமது வளங்களை பகிர்ந்து கொடுப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துகளை ஊடுருவாளர்களுக்கு கொடுக்க சம்மதமா?” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.