ஜாமீன் கோரி கவிதா மனு: சிபிஐக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்
கவிதாவின் ஜாமீன் மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது.
தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் சட்டமேலவை உறுப்பினா் கவிதாவின் ஜாமீன் மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது.
தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையால் கடந்த மாா்ச் மாதம் 15-ஆம் தேதி ஹைதராபாதில் கைது செய்யப்பட்டாா்.
திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, இவ்விவகாரம் தொடா்பான வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி அளித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐயின் காவல் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, நீதிமன்றக் காவலில் அவா் தற்போது சிறையில் உள்ளாா்.
இதனிடையே, ஜாமீன் கோரி கவிதா தாக்கல் செய்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் கடந்த 6-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், சிபிஐ காவலுக்கு அனுமதி வழங்கியது, ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் கவிதா மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுக்கள் மீது பதிலளிக்க கோரி சிபிஐ-க்கு நோட்டீஸ் பிறப்பித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வா்ண காந்த சா்மா, அடுத்த விசாரணையை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கோரிய கவிதாவின் மனுவும் தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விசாரணையும் 24-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.