புணேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் தந்தையும் தொழிலதிபருமான விஷால் அகர்வாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புணே கல்யாணி நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் பைக் மீது சொகுசு கார் மோதியதில், அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
காவல்துறை விசாரணையில் சொகுசு காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என்றும், சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த சிறுவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு அன்றைய தினமே நிபந்தனைகளுடன் ஜாமீனும் வழங்கப்பட்டது.
மதுபோதையில் காரை இயக்கி கைதான சிறுவனுக்கு வெறும் 14 மணிநேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டதற்கும், நீதிமன்றம் விதித்துள்ள மிக எளிய நிபந்தனைகளும் இணையத்தில் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், சிறுவனின் தந்தையும், கட்டுமான தொழிலதிபருமான விஷால் அகர்வால் மீது சிறுவனுக்கு காரை கொடுத்தது, மது அருந்த அனுமதி அளித்ததற்காகவும் 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், சிறுவனுக்கு மது வழங்கிய பார் உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தலைமறைவான சிறுவனின் தந்தையை தேடி வந்த காவல்துறையினர், ஒளரங்காபாத்தில் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
இந்த வழக்கு புணே குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மகனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாதது தெரிந்தும் தந்தை காரை அளித்ததாகவும், சிறுவன் மது அருந்தியது தந்தைக்கு தெரியும் என்றும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.