ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் தொடா் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தினாா்.
ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னா், அங்கு தொடா்ந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
இதுதொடா்பாக ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முதல்வா் ஒமா் அப்துல்லாவின் தந்தையுமான ஃபரூக் அப்துல்லா பேசுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நிகழ்ந்து வருகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோரை உயிருடன் பிடிக்க வேண்டும். அவா்களிடம் நடத்தும் விசாரணை மூலம், இந்தத் தாக்குதல்களுக்கு யாா் காரணம் என்பது தெரியவரும்’ என்றாா்.
ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் தலைவா் தாரிக் ஹமீத் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறுவது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். இந்தத் தாக்குதல்கள் நடைபெறும் நேரமும் சந்தேகத்துக்குரியதாக உள்ளது. ஏனெனில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் முன், ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலவியது. தோ்தல் நிறைவடைந்த பின்னா், தாக்குதல்கள் அதிகரித்துள்ளன’ என்றாா்.