தெலங்கானாவில் நாளை சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்!
காங்கிரஸ் ஆளும் கர்நாடகத்துக்கு பிறகு இரண்டாவது மாநிலமாக தெலங்கானாவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு.
தெலங்கானா மாநிலத்தில் புதன்கிழமை சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கப்படவுள்ளது.
இந்த சாதிவாரி கணக்கெடுப்பு பணியானது, நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, அதன் அறிக்கைகள் பொதுத் தளத்தில் பதிவேற்றப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தெலங்கானா சட்டப்பேரவையில் கடந்த மாதம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தெலங்கானாவில் ஏற்கெனவே பிஆர்எஸ் தலைமையிலான ஆட்சியில் 2014ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், கல்வி, வேலை உள்ளிட்ட 98 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வமாக முடிவுகளை அரசு வெளியிடவில்லை.
இதையும் படிக்க : 4 கிலோ மீட்டரைக் கடக்க ஒரு மணி நேரம்.. பெருமிதத்தில் முதல்வர்
தற்போதைய கணக்கெடுப்பில் அனைத்து சாதியினரின் சமூக பொருளாதார விவரம் உள்ளிட்டவை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் என்ற தகவல் அரசுத் தரப்பில் இன்னும் தெரிவிக்கவில்லை.
48,000 பள்ளி ஆசிரியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதால், தொடக்கப் பள்ளிகளுக்கு இந்த மாதம் அரைநாள் மட்டுமே வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 85,000 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி வீட்டின் கதவில் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று மாலை ஹைதராபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வல்லுநர்கள், மாணவர்களுடனான கலந்துரையாடலில் பேசவுள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகத்துக்கு பிறகு இரண்டாவது மாநிலமாக தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.