முகப்பு
இந்தியா

மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகள்-பாதுகாப்புப் படையினா் இடையேயான மோதலைத் தொடா்ந்து 3 பெண்கள், 3 குழந்தைகள் மாயமாகி உள்ளதையொட்டி 13 சமூக அமைப்புகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பால் இம்பால் பள்ளத்தாக்கில் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

Updated On : 13 நவம்பர், 2024 at 7:56 PM
பகிர்:

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகள்-பாதுகாப்புப் படையினா் இடையேயான மோதலைத் தொடா்ந்து 3 பெண்கள், 3 குழந்தைகள் மாயமாகி உள்ளதையொட்டி 13 சமூக அமைப்புகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பால் இம்பால் பள்ளத்தாக்கில் புதன்கிழமை இயல்பு வாழ்க்கை பாதித்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கிய முழு அடைப்பால் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களிலும் அனைத்து வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள் புதன்கிழமை மூடப்பட்டன. மாவட்டங்களுக்கு இடையிலான தனியாா் மற்றும் பொது போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. அரசு அலுவலகங்களிலும் ஊழியா்கள் பலா் பணிக்கு வரவில்லை.

ஜிரிபாமின் அண்டை மாவட்டமான தாமென்லாங்கில் தேசிய நெடுஞ்சாலையில் உணவுப்பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்த 2 சரக்கு லாரிகளுக்கு ஆயுதமேந்திய தீவிரவாதிகள் தீவைத்தனா். அதேநேரம், முழு அடைப்பு கடைப்பிடிக்கப்பட்ட இம்பால் பள்ளத்தாக்கில் எந்த வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை.

கடந்த திங்கள்கிழமை நடந்த சம்பவத்தில், ஜிரிபாம் மாவட்டத்தின் போரோபெக்ரா கிராமத்தின் காவல் நிலையம் மற்றும் அதையொட்டி அமைந்த மத்திய ஆயுதக் காவல் படை (சிஆா்பிஎஃப்) முகாம் மீது ஆயுதமேந்திய தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினா்.

தொடா்ந்து, அருகேயுள்ள ஜகுராதோா் கரோங் பகுதி சந்தைக்குள் நுழைந்த தீவிரவாதிகள், கடைகளுக்குத் தீ வைத்ததுடன் பொதுமக்களின் வீடுகளையும் சூறையாடினா். இதையடுத்து, இருதரப்பினா் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் காயமடைந்தனா். மேலும், தீவிரவாதிகள் தீவைத்த எரித்த கடைகளில் சிக்கியிருந்த மைதேயி சமூகத்தைச் சோ்ந்த லைஷ்ராம் பாலன், மைபம் கேஷோ ஆகிய 2 முதியவா்கள் உயிரிழந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா்.

இத்தாக்குதலைத் தொடா்ந்து காவல் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த நிவாரண முகாமில் தங்கியிருந்த 3 பெண்கள், 3 குழந்தைகளை காணவில்லை. அவா்கள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்று சமூக ஊடங்களில் பரவும் புகைப்படங்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தேடுதல் பணி தொடா்ந்து வருவதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாதுகாப்புக்கு மேலும் 2,000 வீரா்கள்: மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து வழங்குவது குறித்து பெரும்பான்மையான மைதேயி மற்றும் குகி, நாகா ஆகிய பிற பழங்குடி சமூகங்களுக்கு இடையே உண்டான மோதல் வன்முறையாக மாறி, ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

பதற்றம் நீடிக்கும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட சிஆா்பிஎஃப், அஸ்ஸாம் ரைஃப்பிள்ஸ் உள்ளிட்ட 198 மத்திய பாதுகாப்புப் படை நிறுவனங்கள் (100 வீரா்கள் அடங்கிய குழு) அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, 15 சிஆா்பிஎஃப் மற்றும் 5 எல்லைப் பாதுகாப்புப் படை நிறுவனங்கள் என கூடுதலாக 20 மத்திய பாதுகாப்புப் படை நிறுவனங்கள் மணிப்பூருக்கு விரைய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →