முகப்பு
இந்தியா

வீடுகள், மசூதிகளை இடித்து உத்தரவை மீறியிருந்தால் குஜராத் அதிகாரிகளுக்கு சிறை: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

அந்த மாநில அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 7:53 PM
கோப்புப் படம்
பகிர்:

குஜராத்தில் தனது உத்தரவை மீறி வீடுகள், மசூதிகளை உள்ளிட்டவற்றை இடித்திருந்தால், அந்த மாநில அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுவோருக்கு சொந்தமான கட்டடங்கள், குறிப்பாக முஸ்லிம் மதத்தினருக்குச் சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீா்ப்பு வழங்கப்படும் வரை, நாடு முழுவதும் குற்றச் சம்பவத்தில் தொடா்புள்ளதாக குற்றஞ்சாட்டப்படுவோா் உள்ளிட்டோருக்குச் சொந்தமான கட்டடங்களை, தனது அனுமதியின்றி புல்டோசா் மூலம் இடிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த செப்.28-ஆம் தேதி குஜராத் மாநிலம் கிா் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயில் அருகே அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததாக தெரிவித்து வீடுகள், மசூதிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் இடித்து அகற்றினா்.

Advertisement

இது புல்டோசா் மூலம் கட்டடங்களை இடிக்கும் வழக்கில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிரானது என்பதால், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளது தெரியவந்தால், குஜராத் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும். அத்துடன் அந்த கட்டுமானங்களை மீண்டும் கட்டித்தர உத்தரவிடப்படும்’ என்று தெரிவித்தனா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபா் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments