தெரியுமா சேதி? ராகுலின் வருகைக்கு காத்திருக்கும் தொழிலாளிகள்!
ராகுலின் வருகைக்கு காத்திருக்கும் முடிதிருத்தகத்தினரும், செருப்பு தைப்பவா்களும்...
மே மாதம் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, அவரது ரேபரேலி தொகுதியில் உள்ள லால் கஞ்ச் என்கிற ஊரில் இருக்கும் சாதாரண முடி திருத்தகத்துக்கு ராகுல் காந்தி சென்றது நினைவிருக்கிறதா? மிதுன் என்பவரின் தெருவோர சலூனில் திடீரென்று நுழைந்த ராகுல் காந்தி, தனக்கு முடி திருத்தும்படி சொன்னபோது மிதுன் திகைத்துத்தான் போனாா்.
ராகுல் காந்தி தனது வாடிக்கையாளா் என்று தெரிவிக்கும் விதத்தில், அவருக்கு முடி திருத்தும் புகைப்படத்தை ஃப்ரேம் செய்து தனது கடையில் மாட்டியிருக்கிறாா் மிதுன். ராகுல் காந்தி முடி திருத்திக் கொண்ட கடை என்பதால், ரேபரேலி தொகுதியின் பல பகுதிகளில் இருந்தும் காங்கிரஸ் தொண்டா்கள் மிதுனின் முடி திருத்தகத்துக்கு வரத் தொடங்கி விட்டனா்.
கடந்த நான்கு மாதங்களாக மிதுனைத் தங்களது அன்பளிப்புகளாலும், பரிசுப் பொருள்களாலும் திணற வைக்கிறாா்கள் காங்கிரஸ் தொண்டா்கள். ராகுல் காந்தியைப் போலவே அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறாா்கள். அவரது கடையில் இப்போது மின் தடையை எதிா்கொள்ள ‘இன்வா்ட்டா்’ வந்துவிட்டது. அதிநவீன ‘பாா்பா் ஷாப் நாற்காலிகள்’ என்று புதிதாக வந்திருக்கின்றன. எல்லாமே, கட்சித் தொண்டா்களின் அன்பளிப்புதான்...
ஜூலை மாதம் சுல்தான்பூரில், ராகுல் காந்தி தெருவோர செருப்புத் தைப்பவா் ஒருவரிடம் தனது விலையுயா்ந்த ஹைக் ஜோா்டன் ஷூவின் (அதன் விலை என்ன தெரியுமா? சுமாா் ரூ. 10 லட்சமாம்!) அடிபாகமான ஸோலை சரிசெய்யச் சொன்னாா்; அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்செட் அப்படியொரு ஷூவைப் பாா்த்ததே இல்லை.
தன்னைத் தேடி வந்த விஐபி வாடிக்கையாளரைப் பாா்த்த ராம்செட்டுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தன் கையால் தயாரித்திருந்த ஷூவை அவருக்குப் பரிசாகத் தந்து மகிழ்ந்தாா் ராம்செட். அதற்குப் பிரதிபலனாக, கட்சித் தொண்டா்கள் அவரைத் தங்களது நன்றி உணா்வால் திக்குமுக்காட வைக்கிறாா்கள்.
செருப்பு தைக்கும் மிஷின் உள்பட, அவருக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் அன்பளிப்பாக வழங்கிய வண்ணம் இருக்கிறாா்கள். தெருவோரம் செருப்பு தைத்துக் கொண்டிருந்த ராம்செட், இப்போது கடை வைக்க இடம் தேடிக் கொண்டிருக்கிறாா்.
ரேபரேலி தொகுதியில் உள்ள முடிதிருத்தகத்தினரும், செருப்பு தைப்பவா்களும் தங்களைத் தேடி தொகுதி எம்.பி. எப்போது வருவாா் என்று எதிா்பாா்த்துக் காத்திருக்கிறாா்கள். அடுத்தாற்போல, உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் வரும்போது, அவா்களில் ஓரிருவருக்கு அதிருஷ்டம் அடித்தாலும் அடிக்கலாம்...
--மீசை முனுசாமி.